பக்கம்:கடல்வீரன் கொலம்பஸ்.pdf/107

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

105

பையன்களாய் இருந்த தன் புதல்வர்கள் இருவரையும் கண்டு அளவளாவினான். அரசாங்க முறைப்படி அவன் வரவேற்கப்பட்டான். அவன் அரசருக்கும் அரசியாருக்கும் புறா முட்டை அளவுள்ள தங்கக் கட்டிகள் சிலவற்றை அன்பளிப்பாக வழங்கினான். அரசரும் அரசியும் மகிழ்ச்சியோடு அவனைச் சிறப்பாக வரவேற்ற அந்தச் சமயத்தை நழுவ விடாமல், அவன் மூன்றாவது முறையாகத் தான் ஒரு பயணம் மேற்கொள்ள அனுமதி கேட்டான். இஸ்பானியோலாவுக்கு உணவுப் பொருள்கள் ஏற்றிச் செல்ல ஐந்து கப்பல்களும், புதியதோர் கண்டத்தைக் கண்டு பிடிக்கத் தனக்கு இரு கப்பல்களும் வேண்டும் என்று கேட்டான். ஆண்டிலிஸ் தீவுகளுக்குத் தெற்கே ஒரு கண்டம் இருக்கக் கூடுமென்று போர்ச்சுகல் அரசர் நம்பிக்கை கொண்டிருந்தார். சிவப்பு இந்தியர்களோடு பேசிப் பார்த்ததில், அந்த எண்ணம் கொலம்பசுக்கு வலுப்பட்டது. அந்தக் கண்டத்தைக் கண்டு பிடிக்கவே தனக்கென்று இரு கப்பல்கள் கேட்டான், கொலம்பஸ். போர்ச்சுகல் அரசர் ஜான் இறந்துவிட்ட போதிலும், அவருடைய வாரிசாக வந்துள்ள மானுவேல் பல புதிய முயற்சிகளில் ஈடுபட்டிருக்கிறான் என்ற செய்திகள் அடிக்கடி கிடைத்துவந்தன. ஜான் அரசர் திட்டமிட்ட அந்தக் கண்டத்தைத் தாங்கள் முதலில் கண்டு பிடித்துவிட வேண்டும் என்ற ஆவல் ஸ்பெயின் அரசருக்கும் அரசிக்கும் ஏற்பட்டிருந்தது. வாஸ்கோடகாமா, போர்ச்சுகீசிய நாட்டிலிருந்து புறப்படத் தயாராகி விட்டான் என்று செய்தி கிடைத்ததும் அரசருக்கும் அரசிக்கும் விறுவிறுப்பு ஏற்பட்டது. அதன் பிறகு தான் அவர்கள் கொலம்பசை ஆயத்தப்படுத்தத் தொடங்கினார்கள்.

வாஸ்கோடகாமா ஒரு பெரிய நீண்ட கடற்பயணம் மேற்கொள்ள இருக்கிறான் என்ற செய்தி கிடைத்தது. ஆனால், அவன் என்ன நோக்கத்தோடு எந்தத் திசையில்