பக்கம்:கடல்வீரன் கொலம்பஸ்.pdf/120

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

118

லின் முன்னாள் கப்பலோட்டியான வெரலோன் சேர நைனோ என்பவன் ஒரு முறை பரியா மாநிலம் சென்று ஏரானமான முத்துக்களை ஏற்றிக்கொண்டு வந்தான். நைனா கப்பலின் முன்னாள் கப்பல் தலைவனான வின்சென்ட் யலினஜ் பின்சோன் ஒரு பயணம் சென்று அமேசானைக் கண்டுபிடித்து வந்தான். கொலம்பஸ், தான் கண்டுபிடிக்த நாடுகளுக்கு வைசிராய் என்பது ஏட்டளவில்தான் இருந்தது. அவன் அனுமதியில்லாமலே, அவன் அறியாமலே, கப்பலோட்டத் தெரிந்தவனெல்லாம் அமெரிக்காவுக்குச் சென்று வரத் தொடங்கிவிட்டான்.

அரச சபையிலோ நாளுக்கு நாள் கொலம்பசின் மதிப்புக் குறைந்துவரத் தொடங்கியது. கொலம்பஸ் சகோதரர்களின் ஆதிக்கத்திற்கு எதிர்ப்பான குற்றச்சாட்டுகள் அதிகமாகிக் கொண்டிருந்தன.

குடியேற்ற நாட்டிலிருந்து திரும்பி வந்த ஸ்பானியர்கள் பெருந் தொல்லைக்காரர்களாயிருந்தார்கள். அரசர் வெளியில் எங்கு சென்றாலும் அவரைச் சுற்றிச் சூழ்ந்துகொண்டு "சம்பளம் சம்பளம்!" என்று கூக்குரலிட்டார்கள். அவரை அசையவிடவில்லை. கொலம்பஸ் மகன்கள் இருவரும் அரசியின் ஏவற்பணி புரியும் பையன்களாய் வேலை பார்த்தார்கள். அரசியுடன் போகும்போது அவர்களைக் கண்ட ஸ்பானியர்கள், கூவிக் கூச்சலிட்டு மட்டந்தட்டிப் பேசினார்கள். "அதோ பார் ! கொசுப்படைத் தளபதியின் மக்கள் போகிறார்கள், ஒன்றும் கிடைக்காத நாடுகளைக் கண்டுபிடித்தவனின் மக்கள் போகிறார்கள் ! ஸ்பானியப்பெருமக்களின் சீரழிவுக்கும் பேரிழவுக்கும் காரணமான அந்த இடுகாடுகளைக் கண்டுபிடித்த கொசுப்படைத் தளபதியின் மக்கள் போகிறார்கள் ! அதோ பார் பார் !” என்று கூவி அந்த இளம் பையன்களை இழித்தும் பழித்தும் பேசினார்கள்.