பக்கம்:கடல்வீரன் கொலம்பஸ்.pdf/123

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

121

நினைத்திருந்தால், போபடில்லாவைப் பிடித்துச் சிறையிலடைத்துவிட்டோ, சித்திரவதை செய்துவிட்டோ, கொலம்பசை விடுவித்திருக்க முடியும். ஆனால், அரசர்க்கும் அரசியாருக்கும் செலுத்தும் மரியாதை அதுவல்லவே! ஆகவே, கொலம்பஸ் அவனையும் பணிந்து போகும்படி கூறியனுப்பினான். அவனுக்கும் போபடில்லா கொடுத்த பரிசு, இருப்புச் சங்கிலியும் விலங்கும்தான்!

கொலம்பஸ் மீது வெறுப்புக் கொண்டிருந்த ஸ்பானியர்கள் பலரின் குற்றச்சாட்டுக்களையும் சேகரித்து ஒரு குற்ற அறிக்கை தயாரித்தான் போபடில்லா. அந்த அறிக்கையையும், விலங்கிட்ட கொலம்பஸ் சகோதரர்கள் மூவரையும், இரண்டு கப்பல்களில் ஏற்றி ஸ்பெயினுக்கு விசாரணைக்கு அனுப்பிவைத்தான்.

கொலம்பசை ஏற்றிச் சென்ற கப்பல் தலைவன் அவனிடம் பெருமதிப்பு வைத்திருந்தான். அவன் தானே விலங்குகளை உடைத்துவிட இருந்தான். ஆனால், கொலம்பஸ் அதற்கு இடம் கொடுக்கவில்லை. 'அரச ஆணை பெற்ற. ஓர் அதிகாரியின் கட்டளைக்குக் கீழ்ப்படியாதது அரசர்க்கும் அரசியார்க்கும் கீழ்ப்படியாதது போன்றதாகும். இட்ட விலங்கை அகற்ற இனி அவர்கள்தான் கட்டளை பிறப்பிக்க வேண்டும்' என்று கூறி மறுத்துவிட்டான்.

காடிஜ் துறைமுகத்தில் இறங்கிய கொலம்பஸ், அரச உத்தரவு வரும் வரை செலில்லி நகருக்கருகில் உள்ள புனித மடாலயத்தில் போய்த் தங்கினான். விடுதலை செய்து தங்களை வந்து பார்க்கும்படி அரசரும் அரசியாரும் ஆணை அனுப்ப ஆறு வாரங்கள் பிடித்தன. அந்த ஆறு வாரங்களும் கொலம்பஸ் பூட்டிய விலங்குடன், காவலாள் மேற்பார்வையில்தான் மடாலயத்தில் இருந்தான்.