பக்கம்:கடல்வீரன் கொலம்பஸ்.pdf/139

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

137

துச் சாப்பிட்டார்கள். மறுநாள் மாலை இஸ்பானியோலாவின் டிபுரான் முனையை அடைந்துவிட்டார்கள். அங்கு புதிதாகச் சில இந்தியப் படகோட்டிகளைத் துடுப்பு வலிக்க அமர்த்திக்கொண்டு அசூலாவிற்கு வந்து சேர்ந்தான். அங்கிருந்து கால்நடையாகச் சென்று கவர்னர் ஓவாண்டோ இருந்த இடத்தையடைந்தான்.

கவர்னர் ஓவாண்டோவிடம் அப்போது இரண்டு கப்பல்கள் துறைமுகத்தில் இருந்தன. ஆனால், அவற்றில் ஒன்றைக்கூட அவன் கொலம்பசையும் ஆட்களையும் மீட்டு வர அனுப்ப இசையவில்லை.

கொலம்பஸ் வந்தால் மீண்டும் அவனிடம் ஆட்சிப் பொறுப்பை ஒப்படைத்துத் தான் பதவியை விட்டுவிட நேரிடும் என்று அஞ்சினான் கொலம்பஸ் ஜமைக்காவிலே இருந்து தொலைந்துவிட்டுப் போகட்டும் என்று எண்ணினான். ஏற்பாடு செய்வோம், செய்வோம் என்று சொல்லிச் சொல்லி ஏழு மாதம் வரை மெண்டசைக் காக்கவைத் தான். கடைசியில் கால்நடையாகச் சென்று சாண்டா டோமிங்கோவில் வேறு கப்பல்கள் ஏதாவது ஏற்பாடு செய்து கொள்ள அனுமதித்தான். தன் வசமிருந்த இரண்டு கப்பல்களில் ஒன்றைக் கூடக் கொடுக்க முடியாதென்று கண்டிப்பாக மறுத்துவிட்டான்.

கப்பல் கொண்டுவரப் போனவர்கள் என்ன ஆனார்கள் என்றே தெரியவில்லை. ஆறுமாதமாகியும் ஆறுதலான செய்தி எதுவும் கிடைக்கவில்லை. கொலம்பசுடன் கூட இருந்த மாலுமிகளில் சிலர் முணுமுணுத்தார்கள். கொலம்பசுக்கும் அவர்களுக்குமிடையே சச்சரவு மூண்டது. எதிர்ப்பாளர்கள், போராஸ் சகோதரர்களின் தலைமையில் ஒன்று திரண்டார்கள்