பக்கம்:கடல்வீரன் கொலம்பஸ்.pdf/150

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

148

பெரும் புயல்களையும் அவற்றின் கொடுமைகளையும் பொறுத்துக் கொண்டிருந்திருக்கிறான். ஊக்கமும் விடாமுயற்சியும் மிகுந்தவனாக இருந்தும், அவன் தன் செயல்களில் பெருந்தோல்விகளையே காணநேரிட்டது. அதற்குரிய காரணத்தையும் ஆங்காங்கே இக்கதையில் விளக்கிக் கூறப்பட்டுள்ளது. விஞ்ஞான வசதிகள் இல்லாத அக்காலத்தில் புத்தம்புதிய இடங்களைக் கண்டுபிடிப்பதும், போனவழியே திரும்பி வருவதுமே அரிய காரியங்கள். கொலம்பஸ் பலநேரங்களில் தோல்வியைச் சந்தித்தான் என்றால், அதற்கு அவனுடைய ஊக்கமின்மை காரணமன்று.

ஒன்றைத் தேடுகிறவன், அது உள்ள இடத்தை விட்டு விட்டு மற்ற இடம் அனைத்தையும் தேடிப்பார்த்துவிட்டுத் திரும்பும் கதை போலவே கொலம்பஸ் செயல்கள் அனைத்தும் முடிந்திருக்கின்றன. இந்த முறையிலே தான் இந்தியாவைத் தேடிவந்தவன் அமெரிக்காவைக் கண்டுபிடித்தான். ஆனால், அமெரிக்கா தன் பெருவளம் முழுவதையும் அவன் கண்ணுக்குக் காட்டாமல் ஏமாற்றிவிட்டது.

கொலம்பகடன் கூடச்சென்றவர்கள், அவன் கொசுப் படைத்தளபதி என்று கிண்டல் செய்யும் அளவுக்கு அமெரிக்கா வெற்று நிலமாகத் தோன்றியது. ஆனால் அவனுக்குப் பின்னால் சென்றவர்கள் சிறிது சிறிதாக அந்நிலத்தின் தங்கவளத்தைக் கண்டார்கள். ஆசியாவில்தான் தங்கம் நிறையக் கிடைக்கிறதென்று எண்ணி, இந்தியாவையும் சீனாவையும் பற்றிக் கனவுகண்டு கதை பேசிக் கொண்டிருந்த ஐரோப்பியர்கள் அமெரிக்காவில் தங்கம் கிடைக்கிற தென்றவுடன் கூட்டங் கூட்டமாக அங்கே குடியேறினார்கள்.

இன்று அமெரிக்கா உலகத்திலேயே மிகப்பெரிய வல்லரசாகவும், செல்வத்திருநாடாகவும் விளங்குகிறது. இன்றைய அமெரிக்காவின். மூல முதல்வன் கொலம்பஸ் தான்! ஆம்! பெருங்கடல்தளபதி கிரிஸ்டாபர் கொலம்பஸ் தான்!.