பக்கம்:கடல்வீரன் கொலம்பஸ்.pdf/23

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

21

வாரையும் அங்கு அவனுக்குத் தெரியாது. இருந்தாலும் ஊக்கத்தைத் துணையாகக் கொண்டு தன் ஐந்து வயது மகன் உகோவை உடனழைத்துக் கொண்டு தன் கப்பலை ஸ்பெயின் நாடு நோக்கிச் செலுத்தினான் கொலம்பஸ்.

கப்பல் பாலோஸ் துறைமுகத்தை நெருங்கிக் கொண் டிருக்கும் போது, கரையோரத்தில் இருந்த பிரான்சிஸ்கன் மடாலயக் கட்டிடங்கள் கொலம்பசின் கண்களில் தென் பட்டன. உடனே அவன் தன் மகன் டீகோவை என்ன செய்வதென்று முடிவுகட்டி விட்டான்.

பிரான்சிஸ்கன் மடாலயத்தார், சிறுவர்களை மாணாக்கர்களாக ஏற்றுக் கொண்டு அவர்களுக்குக் கல்விகற்றுக் கொடுத்ததோடு உணவும் உடையும் உறையுளும் கூடத் தருமமாக வழங்கி வந்தார்கள். அந்த மடாலயத்தில் தன் மகனைச் சோத்து விடுவதென்ற முடிவுக்கு வந்த கொலம்பஸ். பாலோஸ் துறைமுகத்தில் தன் கப்பலுக்கு நங்கூரம் பாய்ச்சி விட்டுக் கரையில் இறங்கினான். தன்மகனை அழைத்துக் கொண்டு நான்கு மைல் தொலைவில் இருந்த அந்த மடாலயத்துக்கு நடந்தே சென்றான். மடாலயத்தை யடைந்ததும், கதவைத் தட்டினான். கதவைத் திறந்து கொண்டு வெளியில் வந்த வேலைக்காரனிடம் தனக்குத் தாகத்திற்குத் தண்ணீரும் பையனுக்குச் சிறிது ரொட்டியும் கொடுக்கும்படி கேட்டுக் கொண்டான். அப்பொழுது அவனுடைய அதிர்ஷ்டவசமாக அருள் நிறைந்த உள்ளமும் வான நூல் ஆராய்ச்சியில் நல்ல தேர்ச்சியும் பெற்றவரும், பிரான்சிஸ்கன் பெருந்துறவியருள் ஒருவருமான அண்டோனியோ டி மார்ச்சினா என்ற பெரியவர் வாசற் பக்கம் வந்தார். கொலம்பசுடன் பேசத் தொடங்கிய அவர் அன்புடன் உள்ளழைத்துச் சென்றார். அவன் வேண்டுகோளுக்கு இணங்கிச் சிறுவனைத் தன் மாணாக்கனாக ஏற்றுக்கொள்ள இசைந்தார். கொலம்பசின் கனவுகளையும்

கொ-2