பக்கம்:கடல்வீரன் கொலம்பஸ்.pdf/32

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

30

வாங்கிக் கொள்வதற்கும் அவன் கேட்டெழுதியிருந்தபடி பணமும் அனுப்பி வைத்தாள். 1491-ம் ஆண்டு கிறிஸ்துமஸ் சமயத்தில் கொலம்பஸ் சாண்டாபீ என்ற ஊர் முகாமில் கூடிய அரசசபைக்கு வந்து சேர்ந்தான். உடனே அவனுடைய திட்டத்தை ஆராய ஒரு புதுக் குழுவை நியமித்தாள் இசபெல்லா. அந்தப் புதுக் குழுவினர் கொலம்பஸ் திட்டத்தை முயன்று பார்க்கலாம் என்றும் ஆனால் அந்தத் திட்டம் வெற்றி பெற்றால் தனக்கு வேண்டும் என்று அவன் கேட்கும் சலுகைகள் அதிகம் என்றும் கூறினார்கள்.

1485-ம் ஆண்டில் சீமான் மெடினா சீலியின் ஆதரவில் பயணம் மேற்கொள்ள இருந்தபோது செலவுக்கு மட்டும் கொடுத்தால் போதும் என்ற கொலம்பஸ்தான் 1491-ல் தான் கண்டு பிடிக்கும் நாடுகளுக்கு அதிகமான விலை கேட்டான். தான் கண்டு பிடிக்கும் புதுநாடுகளுக்குத் தன்னையே ஆட்சித் தலைவனாக நியமிக்க வேண்டும் என்றும், தன்னை அரசப் பிரதிநிதியாக நியமிக்க வேண்டும் என்றும் இந்த இருபதவிகளும் தன் பின் சந்ததியினருக்கும் பரம்பரை யுரிமையாகக் கொடுக்கப்பட வேண்டும் என்றும், அந்த நாடுகளில் செய்யும் வாணிக லாபத்தில் பத்தில் ஒரு பங்கு தனக்கும் தன் வாரிசுகளுக்கும் சேர வேண்டும் என்றும் அவன் கேட்டான். ஸ்பெயினில் அவன் இருந்த காலத்தில் அனுபவித்ததெல்லாம் துன்பமும் துயரமுமே! ஆளான தெல்லாம் பழிக்கும் கேலிக்குமே! ஆகவே, தனக்குரிய சரியான கூலி கிடைக்காமல் ஸ்பெயின் நாட்டை மேம்படுத்த முடியாது என்று அவன் உறுதியான பிடிவாதம் கொண்டிருந்தான். "என்னுடைய கட்டுத் திட்டங்களை ஒப்புக் கொண்டால் அப்படியே ஒப்புக் கொள்ளுங்கள்; இல்லாவிட்டால் விட்டுவிடுங்கள். பேரம் வேண்டிய தில்லை!" என்று தீர்மானமாகச் சொல்லி விட்டான் கிரிஸ்டாபர் கொலம்பஸ்.