பக்கம்:கடல்வீரன் கொலம்பஸ்.pdf/36

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

34

வும் நியமிக்கப்பட்டனர். சாண்டாமேரியா, நைனா. பிண்டா என்ற பெயருடைய மூன்று பாய்மரக்கப்பல்களில் அதிகாரிகளும் வேலையாட்களுமாக மொத்தம் 90 ஆட்கள் கொலம்பசுடன் புறப்பட்டார்கள். இவர்களில் பெரும்பாலோர் ஸ்பானியர்கள். கொலம்பசுடன் இன்னொரு ஜினோவாக் காரனும் வேனிஸ்காரன் ஒருவனும் போர்ச்சுகீசியன் ஒருவனும் பிற நாட்டவர்கள். ஆயுள் தண்டனை யடைந்த கைதிகள் மூவர் . அவ்விளைஞர்கள். கொலம்பசுடன் செல்லுவதற்காக விடுதலை செய்யப் பெற்றனர்.

1492 -ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 2-ம் நாளன்று எல்லாம் ஆயத்த மாகிவிட்டது. மூன்று கப்பல்களின் குறுக்கிலும் நெடுக்கிலும் பலவண்ணக் கொடிகள் பறந்து இன்பக்காட்சி யளித்தன. இசபெல்லா அரசியின் ஆட்சிச் சின்னங்களான கோட்டையும் சிங்கமும் பொறித்த பெரிய கொடிகள் ஒவ்வொரு கப்பலின் கொடிமரத்திலும் பட்டொளி வீசிப் பறந்தன. அன்று இரவு அந்தக் கப்பலில் புறப்பட இருந்த ஒவ்வொருவனும், பாலோஸ் தேவாலயத்தில் சென்று தன் பாவங்களைக் கூறிக் குறையிரந்து ஆண்டவன் துணையை வேண்டித் தொழுகை நடத்தி விட்டு வந்தான். ஆகஸ்ட் 3-ம் நாள் வெள்ளிக் கிழமை அதிகாலையில் கொலம்பஸ் கப்பலில் ஏறினான். பகலவன் தோன்று முன்பாகவே மூன்று கப்பல்களும் நங்கூரங்களைத் தூக்கிவிட்டன, இளங் காற்று வீசும் அந்தப் புலர் காலைப்பொழுதில் வண்ணக் கொடிகள் அழகுற அசைந்தாட, பாய்கள் தொங்கி விரிந்து காற்றடைந்து செல்ல கப்பல்கள் மெல்லப் புறப்பட்டன. கொலம்பஸ் மகன் இருக்கும் மடாலயத்தின் பக்கமாக செல்லும் போது அந்த மடாலயத்துத் துறவிகள் "என்றென்றும் மேன்மேலும் உன்னருளைப் பொழிய வேண்டும் இறைவா" என்று வேண்டும் மந்திர ஒலிகள் காற்றுவாக்கில் கப்பலில் இருந்தவர்களின் செவிகளில் வந்து மோதின