பக்கம்:கடல்வீரன் கொலம்பஸ்.pdf/39

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

37

எவ்விதமான தொந்தரவும் இல்லாமல் அன்னப்பட்சிகள் போல் யாரும் போயறியாத அந்த மாகடல் வழியாக அமைதியாகப் போய்க் கொண்டிருந்தன. அந்த பத்துப் பனிரெண்டு நாட்களும் இன்பமயமாக இருந்தன. பார்க்கு மிடமெங்கும் பத்துத்திசையிலும் ஒரே நீலநிறம். மேலே அமைதியான நீலவானம். இடையிடையே மெல்லத் தவழ்ந்து செல்லும் வெள்ளை மேகங்கள். கீழே அலை புரளும் நீலக்கடல். அதன் மத்தியிலே பாய்விரித்து அழகுற மிதந்து செல்லும் மூன்று கலங்கள்! பார்க்கப் பார்க்க இனிமையான அழகிய கண்காட்சி. காலைக்கதிரவன் உதயக்காட்சியும் மாலையில் நீரில் முழ்கும் மாட்சியும் எத்தனை இன்பம்! "வானம்பாடி பாடாத குறை ஒன்று தான்!" என்று கொலம்பஸ் தன் குறிப்புப் புத்தகத்தில் எழுதியிருந்தான். இந்தப் பத்துப் பனிரெண்டு நாட்களிலும் ஒரே சீராகக் சென்று கொண்டிருந்த கப்பல்கள் ஏறக்குறைய 1160 மைல்கள் கடந்துவிட்டன. ஆனால் அதன் பிறகு காற்று மாறியடிக்கத் தொடங்கிவிட்டது. நான்கைந்து நாட்களாக மழை வேறு பிடித்துக் கொண்டு விட்டது. இந்த ஐந்து நாட்களில் சுமார் 240 மைல் தான் நகர முடிந்தது.

கப்பலில் இருந்த சில மாலுமிகளுக்கு முதலில் ஒரு விதமான பயமிருந்தது. மேற்கு நோக்கியே இந்தக் காற்று ஓரே சீராக அடித்துக் கொண்டிருந்தால் அதை எதிர்த்து எப்படித் தாய்நாட்டுக்குத் திரும்பப் போகிறோம் என்று பயந்து கொண்டிருந்தார்கள். காற்றுத் திரும்பியடித்தது. சரி சரி திரும்பவும் வழியிருக்கிறது என்று திருப்தியடைந்தார்கள். செப்டம்பர் மாதம் 24, 25-ம் நாட்களில் அவர்கள் போய்க் கொண்டிருந்த இடத்தில் தான் அண்டிலியா என்ற தீவு இருக்க வேண்டும் என்று எதிர்பார்த் தான் கொலம்பஸ். ஆனால், அந்த இடத்தில் ஆழம் பார்த்தபோது 200 பாகங்களுக்கும் அதிகமான ஆழமிருந்-

கொ-3