பக்கம்:கடல்வீரன் கொலம்பஸ்.pdf/41

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

39

நாட்டை விட்டு விலகி வந்தாயிற்று. போகப் போக நாடு விலகிக் கொண்டே போகிறது. போகுந்திசையில் என்ன இருக்கிறதோ? அடிவானம் தூரப் போகப்போக ஆழிதான் தென்படுகிறது. வேறு எதுவும் இருந்தாலல்லவாதென்படும்? எல்லோருக்கும் ஒருவிதமான பயம் ஏற்பட்டது. உயிருடன் நாடு திரும்ப முடியாதோ? கரையே காணாமல் கண்காணாத கடல் வெளியில் அனாதைப் பிணங்களாக அலைகளில் மிதக்க நேரிடுமோ?

ஒவ்வொருவர் உள்ளத்திலும் ஏற்பட்ட பயம் சதியாக உருவெடுத்தது. அங்கங்கே கப்பல் தட்டுகளில் நான்கைந்து பேராகக் கூடிப் பேசினார்கள். கடலுக்கு அக்கரையே இல்லையென்று சொல்லுவார்கள் பெரியோர்கள். அடிவானத்துக் கப்பால் கடலும் வானும் கலப்பதைத் தவிர வேறு எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. அந்தப் பாவிப்பயல் ஜினோவாக்காரனுக்கு மட்டும் ஏதோ இருப்பதாகத் தெரிகிறது. வாருங்கள் எல்லோரும் போய் அவனைக் கப்பலைத் திருப்பச் சொல்லுவோம். ஒப்புக் கொள்ளாவிட்டால் அவனைக் கடலிலே தூக்கி எறிந்து விட்டு நாம் திருப்பிக் கொண்டு செல்லுவோம். இப்படியெல்லாம் மாலுமிகள் கூடிப் பேசித் தீர்மானித்தார்கள்.

ஆனால் அக்டோபர் முதல் தேதி காற்றின் வேகம் அதிகரித்தது. மேற்கொண்டு ஐந்தே நாட்களில் கப்பல் 700 மைல் கடந்துவிட்டது. ஏறக்குறைய 2500 மைல் கடந்தாகி விட்டது. எனவே ஜப்பானை நெருங்கி விட்டோம் என்று எண்ணினான் கொலம்பஸ். மறுநாளே கப்பல்களுக்கு மேலே சில பறவைகள் கூட்டங் கூட்டமாகப் பறந்து சென்றன. ஏதோ நிலமிருக்கும் திசை நோக்கித் தான் அவை போகின்றன என்று எண்ணி அவை பறந்து சென்ற திசையில் கப்பல்களை மாற்றி ஓட்டினான். ஆனால்