பக்கம்:கடல்வீரன் கொலம்பஸ்.pdf/50

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

48

இன்று அழைக்கப்படும் அந்தக் கோல்பாத் தீவின் மேற்குக் கரைத் துறைமுகங்களின் வழியாக அழைத்துச் செல்லப்பட்டார்கள். அவர்களுடைய வியாபாரப் பொருள்கள் அங்கிருந்த மக்களுக்கு மிகப் பிடித்திருந்தன. அவர்களில் சிலர் வெள்ளையர்களைத் திருப்திப் படுத்துவதற்காக அந்தத் தீவின் உட்பகுதியில் உள்ள குபனாக்கன் என்ற ஊரில் தங்கம் கிடைக்கும் என்று கூறினார்கள். அந்தக் குபனாக்கன் என்ற ஊரில் தான் சீனப் பேரரசின் அரண்மனை இருக்க வேண்டும் என்று கொலம்பஸ் எண்ணினான். உடனே அந்த ஊருக்கு அவன் ஒரு தூதுக் குழுவை அனுப்ப ஏற்பாடு செய்தான். சீனப் பேரரசின் மாமன்னரான கான் பேரரசருக்கு என்று ஸ்பெயின் நாட்டு மாமன்னரும் பேரரசியும் கொடுத்த அறிமுகக் கடிதத்தை எடுத்தான். ஏற்கெனவே கினியா நாட்டில் ஒரு நீக்ரோ அரசரைப் பேட்டி கண்டு வந்த அனுபவமுடைய ரோட்ரிகோ என்பவனையும், அரபு மொழியில் சிறந்த பாண்டித்தியமுடைய லூயிஸ் டிடோரிஸ் என்பவனையும் தன் தூதர்களாக நியமித்து அவர்கள் கையில் மாமன்னரின் அறிமுகக் கடிதத்தைக் கொடுத்து அனுப்பினான் கொலம்பஸ்.

சிவப்பு இந்திய வழிகாட்டிகளின் துணையோடு அந்தத் தூதர்கள் குபனாக்கன் சென்றார்கள். அவர்கள் எதிர் பார்த்த மாடமாளிகைகளும் கூடகோபுரங்களும் அங்கேயில்லை. ஐம்பது கூரைக் குடிசைகள் தான் காட்சியளித்தன. சட்டை போட்டுக் கொண்டு வந்த அந்த இரண்டு வெள்ளைக்காரர்களையும் வானத்திலிருந்து குதித்துவந்த தேவர்களாக மதித்து அந்த ஊர் மக்கள் ஓடோடி வந்து கும்பிட்டார்கள். தங்கள் தங்கள் கையில் இருந்த பொருள்களைக் கொண்டு வந்து படைத்தார்கள். நல்ல முறையில் விருந்தளித்தார்கள். ஆண்களும் பெண்களுமாக வந்து அவர்கள் பாதங்களை முத்தமிட்டுச் சென்றார்கள்.