பக்கம்:கடல்வீரன் கொலம்பஸ்.pdf/53

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

51

அந்தத் தீவில் நன்றாக மழை பிடித்துக் கொண்டதன் காரணமாக ஐந்தாறு நாட்கள் தங்கும்படி நேரிட்டது. அவனுடைய கப்பல் மாலுமிகளில் மூவர், ஓர் இளம் பெண்ணை யாருக்கும் தெரியாமல் பிடித்துக் கொண்டுவந்து விட்டார்கள். அவள் தங்க மூக்கு வளையத்தைத் தவிர வேறு எதுவுமே அணிந்திருக்கவில்லை. அவள் டாயினோ இனத் தலைவன் ஒருவன் மகள். கொலம்பஸ் தன் மாலுமிகளைக் கடிந்துகொண்டு, அந்தப் பெண்ணுக்கு நாகரிக உடையுடுத்தி விட்டுக் கைநிறையப் பொருள்களைக் கொடுத்து ஊருக்குள் அனுப்பி விட்டான். இந்த உத்தமச் செயலைக் கண்டு அந்த ஊர் மக்கள் கொலம்பசையும் ஸ்பானியர்களையும் மிக மதித்துப் போற்றினார்கள். மறுநாள் ஒன்பது மாலுமிகளை அழைத்துச் சென்று ஆயிரம் பேர் கூடிய கூட்டத்தில் அவர்களுக்கு விருந்து வைத்துச் சிறப்பித்தார்கள். தங்கள் கையில் இருந்த பொருள்களை யெல்லாம் அம்மக்கள் பரிசாகக் கொடுத்து மகிழ்ந்தார்கள்.

டிசம்பர் மாதம் 20-ஆம் நாள் அக்குல் வளைகுடாவை யடைந்தான் கொலம்பஸ். ஹைட்டி என்ற அந்தப் பிரதேசத்து மக்கள் மற்ற டாயினோக்களைவிட வெள்ளையுள்ளம் படைத்தவர்களாயிருந்தார்கள். ஆண்களும் பெண்களும் ஆடைகள் எதுவுமற்றுப் பிறந்த மேனியாய் இருந்ததோடு மட்டுமல்லாமல், அந்நியர்கள் எதிரில் நிற்க நாணங் கொள்ளவும் இல்லை. அந்த மக்களிடம் தங்கம் நிறைய இருப்பதாகத் தெரிந்தது. வெள்ளைக்காரர்களையும் அவர்களுடைய கப்பல்களையும் கண்டு அந்த மக்கள் அதி ஆச்சரியம் கொண்டார்கள். ஆயிரம் பேருக்கு மேல் ஓடங்களில் வந்து கப்பலைச் சூழ்ந்து கொண்டார்கள். கரையிலிருந்து மூன்று மைல் தூரத்தில் நங்கூரம் பாய்ச்சி நின்ற கப்பலுக்கு சுமார் ஐநூறு பேர் நீந்தியே வந்து சேர்ந்து விட்டார்கள்.