பக்கம்:கடல்வீரன் கொலம்பஸ்.pdf/59

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

57

திரும்பி வரும் வழியில் பிப்ரவரி மாதம் 12ஆம் நாள் காற்றின் வேகம் அதிகரித்தது. நேரம் ஆக ஆக வேகம் கூடியது. கடல் கொந்தளித்தது 13-14-ஆம் நாட்களில் இரு கப்பல்களும் பார்வைக் கெட்டாத தூரத்தில் விலகி விட்டன. அதன் பின் நாடு போய்ச் சேரும் வரையில் இரு கப்பல்களும் சந்திக்கவேயில்லை. காற்றின் வேகம் பயங்கரமாக அதிகரித்தவுடன், மாலுமிகள் எல்லோரும் கன்னிமரியாளை வேண்டிக் கொண்டார்கள். "மேரி மாதா, எங்களை எந்த விதமான ஆபத்துமில்லாமல் கரையில் சேர்த்து விடு. முதலில் எந்த ஊரில் இறங்குகிறோமோ அந்த ஊரில் உள்ள உன் கோயிலுக்கு எல்லோரும் அணிந்துள்ள சட்டையோடு ஊர்வலமாக நடந்து வந்து தொழுகை செய்கிறோம்" என்று வேண்டிக் கொண்டார்கள். அதன் பிறகு காற்றின் வேகம் குறையத் தொடங்கியது. பிப்ரவரி 15-ஆம் நாள் காலையில் அசோர்சுத் தீவுகளில் ஒன்றான சாண்டா மரியாவின் துறைமுகத்தில் வந்து நங்கூரம் பாய்ச்சினார்கள். அஞ்சோஸ் என்ற கிராமத்தின் அருகில்தான் அவர்கள் கப்பலை நிறுத்தினார்கள். உடனே கரையில் இறங்கித் தங்கள் வேண்டுதலை நிறைவேற்ற மாதா கோவிலுக்குச் சென்றார்கள்.

மாதா கோயிலிலே அவர்கள் தொழுகை நடத்திக் கொண்டிருந்தபோது அந்த ஊர் மக்கள் அவர்களைச் சூழ்ந்து கொண்டு பிடித்துச் சிறையில் அடைத்து விட்டார்கள். அந்தத் தீவு போர்ச்சுகீசியர் ஆதிக்கத்தில் இருந்தது. அதன் தலைவன், யாரோ கள்ளத்தனமாக மேற்கு ஆப்பிரிக்கா போய் வருபவர்கள் என்று எண்ணித்தான் மாலுமிகளைச் சிறையில் அடைத்தான். கொலம்பசும், சில மாலுமிகளும் பிறகு கோயில் போகலாம் என்று கப்பலில் தங்கி யிருந்தார்கள். அவர்களைக் கைது செய்வதற்காக அந்தத் தீவின் தலைவன் சென்றான். கொலம்பஸ் அவனைக் கப்பலில் ஏற அனுமதி மறுத்ததோடு, தன் ஆட்களை விடுவிக்கா-