பக்கம்:கடல்வீரன் கொலம்பஸ்.pdf/62

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

60

ஏறிக் கஷ்டப்பட்டுக் கொண்டு வந்த சிவப்பு இந்தியர்கள், இப்போது குதிரை முதுகில் ஏறி அதிக சிரமப்பட்டார்கள். அத்தோடு போர்ச்சுக்கல் வீதிகள் மிகவும் குறுகலானவை என்பதோடு சகதி நிறைந்தவை.

கொலம்பசுடன் பேசிய ஜான் அரசன் அன்பொழுகப் பேசினாலும், உள்ளத்திற்குள் ஆத்திரங் கொண்டிருந்தான். கொலம்பஸ் தான் கண்டு பிடித்த நாடுகளைப் பற்றிக் கதை கதையாகக் கூறியதைக் கேட்ட பிறகும் அவன் முன்பே போர்ச்சுக்கல் நாட்டவர் கண்டு பிடித்த இடங்களுக்கே சென்று வந்தானோ என்று சந்தேகப் பட்டான். ஆனால், அவன் கூடக் கொண்டு வந்திருந்த சிவப்பு இந்தியர்களைக் கண்டதும் அந்தச் சந்தேகம் நீங்கியது. அவர்களைப் போன்ற தோற்றமுடைய மக்களை அவன் அதற்கு முன் பார்த்ததில்லை.

போர்ச்சுக்கல் அரசரையும் அரசியையும் பார்த்து விட்டு கொலம்பஸ் திரும்பி வந்தபோது நைனா கப்பல் பழுது பார்க்கப்பட்டுப் புதுப் பாய் மரங்களுடன் புறப்படத் தயாராக அழகாக நின்றது. வேண்டிய உணவுப் பொருள்களும் ஏற்றப்பட்டிருந்தன.

கொலம்பஸ் ஏறிவந்த நைனா கப்பல் திசைமாறிய பின், அலோன் சோ பின்சோன் நடத்தி வந்த பிண்டா கப்பல் வேறொரு திசை வழியாக ஸ்பெயினுக்கு வந்து சேர்ந்தது. அக்கப்பல் புயலின் கொடுமைகளுக்குத் தப்பி விட்டது. லிஸ்பனிலிருந்து நைனா புறப்பட்டு ஸ்பெயினை நோக்கிச் சென்றது. செல்லும் வழியில் அதன் பின்னாலேயே கண்ணுக் கெட்டாத தூரத்தில் பிண்டாவும் தொடர்ந்து வந்து கொண்டிருந்தது. அலோன்சோ பின்சோன், முன்னதாகவே ஸ்பெயினின் வடக்குப் பகுதியில் உள்ள யயோனாத் துறைமுகத்தில் தன் கப்பலை நிறுத்தி, பார்-