பக்கம்:கடல்வீரன் கொலம்பஸ்.pdf/66

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

64

கைகளில் முத்தமிட்டான். சுமார் எட்டு மாதம் கண் காணாத கடலில் சுற்றித் திரிந்து, ஸ்பெயின் நாட்டுக்குப் பல புதிய தீவுகளை உரிமையாக்கிக் கொடுத்த அந்த மாவீரனை வாழ்த்தினார்கள் மாமன்னரும் பேரரசியும். அரசிக்கு வலது பக்கத்தில் அவனுக்கு இடமளிக்கப்பட்டது. அவன் தான் கொண்டு வந்திருந்த சிவப்பு இந்தியர்களையும், பச்சைக் கிளிகளையும் தங்க ஆபரணங்களையும், மருந்து மூலிகைகளையும் அவர்களுக்குக் காணிக்கையாக கொடுத்தான். அரசரும் அரசியும், அந்தப் புதிய நாடுகளைப் பற்றிப் பல கேள்விகளைக் கேட்டு அறிந்தார்கள். பிறகு எல்லோரும் அருகில் இருந்த தேவாலயத்துக்குச் சென்று இறைவன் முன் மண்டியிட்டு எல்லாம் நன்மையாக முடிய வேண்டுமென்று தொழுகை நடத்தினார்கள். அப்போது கொலம்பஸ் அடைந்த ஆனந்தத்தின் அளவை, அவன் கன்னங்களில் வழிந்த கண்ணீராலும் கணக்கிட்டுக் கூற முடியாது!

அந்த நேரத்தில் கொலம்பஸ் நினைத்திருந்தால், என்ன வேண்டுமானாலும் பெற்றிருக்கலாம். கோட்டை கொத்தளம், பட்டம் பதவி, செல்வம், எதைக் கேட்டாலும் அரசி கொடுத்திருப்பாள். ஆனால், இந்தச் சுகபோகங்களைக் காட்டிலும் மேலான இலட்சியம் ஒன்று அவனுக்கு இருந்தது.

தான் கண்டு பிடித்த நாடுகளில் குடியேற்றம் செய்ய வேண்டும்; தங்க வாணிபம் சீரான முறையில் அங்கு நடைபெற வழிவகுக்க வேண்டும்; அந்த நாட்டு மக்களைக் கிறிஸ்துவ மதத்தில் சேர்த்துவிட வேண்டும்; கான் பேரரசருடன் அல்லது குவாக்க நாகரியை விடப் பன் மடங்கு பெரிய அரசன் ஒருவனுடன் வாணிக ஒப்பந்தம் செய்து கொள்ள வேண்டும். இப்படியெல்லாம் பல எண்ணங்களைக் கொண்டிருந்தான் கொலம்பஸ்.