பக்கம்:கடல்வீரன் கொலம்பஸ்.pdf/69

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

67

என்று நான் ஐயுறும் வண்ணம் அந்தக் கரை நீண்டு கொண்டே சென்றது. அந்தத் தீவில் நான் சென்ற வழியில் பட்டணங்களோ நகரங்களோ காணப்படவில்லை. சிறு சிறு கிராமங்களே தென்பட்டன. அந்தத் தீவின் குடி மக்கள் யாருடனும் நான் பேச முடியவில்லை. ஏனெனில் அவர்கள் என்னைக் கண்டவுடன் ஓடத் தொடங்கி விட்டார்கள். ஏதாவது ஒரு நகரத்தைக் காணலாம் என்ற நம்பிக்கையோடு நான் சென்று கொண்டேயிருந்தேன். ஆனால், பல காதங்கள் சென்ற பின்னும் பயனில்லை. கரையோ வடக்கு நோக்கி என்னை நடத்திக் கொண்டு சென்றது. குளிர்காலம் துவங்கிவிட்டபடியால் நான் தெற்கு நொக்கித் திரும்பி ஒரு குறிப்பிடத்தக்க துறை முகத்திற்கு வந்தேன். பிறகு இரண்டு ஆட்களை உள் நாட்டுப் பகுதிக்கு அனுப்பி ஏதாவது நகரமோ அல்லது யாராவது அரசரோ இருப்பதையறிந்து வரச் செய்தேன். அவர்கள் மூன்று நாள் பயணம் மேற்கொண்டும், சிறு சிறு கிராமங்களையும் அங்கு வாழும் எண்ணற்ற மக்களையும் கண்டு வந்தார்களே தவிர, வேறு முக்கியமான எதையும் காண முடியவில்லை. ஆகவே, பேசாமல் திரும்பி வந்து விட்டார்கள்.

ஏற்கெனவே நான் பிடித்து வைத்திருந்த இந்தியர்கள் மூலம் அது ஒரு தீவு தான் என்று அறிந்தேன். அதன் கரையோரமாகவே கிழக்கு நோக்கிச் சென்றேன். அது முடியும் இடத்தில் உள்ள முனைக்குச் சென்ற பின், அங் கிருந்து பதினெட்டுக் காத தூரத்தில் மற்றொரு தீவு இருக்கக் கண்டேன். அந்தத் தீவிற்கு நான் உடனே லாஸ் பானோலா என்று பெயரிட்டேன்.

அந்தத் தீவுக்குச் சென்று அதன் வடபகுதியில் கிழக்கு நோக்கி 178 காதம் வரை சென்றேன். ஜுலானாவைப் போலவே இதுவும் மிக வளம் நிறைந்த பூமியாக உள்ளது.