பக்கம்:கடல்வீரன் கொலம்பஸ்.pdf/72

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

70

இப்படித்தான் அறிமுகப்படுத்தினார்கள். உடனே மற்றவர்கள், வீட்டுக்கு வீடு ஓடி, "வானத்திலிருந்து வந்தவர்களை வந்து பாருங்கள் ! வாருங்கள் வாருங்கள்!" என்று கூவுவார்கள். ஆண்களும் பெண்களும் சிறுவர்களும் பெரியவர்களும் ஒருவர் பாக்கியில்லாமல் ஊரில் உள்ளவர்கள் எல்லோரும் கூடிவிடுவார்கள். ஒவ்வொருவரும் குடிப்பதற்கும் உண்பதற்கும் ஏதாவது கொண்டு வந்து பயபக்தியுடன் என் முன் படைப்பார்கள்.

அந்த மக்கள் கடலைக் கடக்கச் சிற்றோடங்களையே பயன்படுத்தி வந்தார்கள். இந்த ஓடங்கள் ஒரே மரத்தாலானவை. சில சிறியவை, சில பெரியவை. பெரிய ஓடத்தில் சுமார் 70 அல்லது 80 பேர்வரை ஏறிச் செல்ல முடியும். ஏறியுள்ள ஒவ்வொருவரும் துடுப்புவலித்துக் கொண்டு போவார்கள். இந்த ஓடங்களிலேயே அவர்கள் அந்தத் தீவுக்கூட்டங்களுக்கிடையே போய் வருவார்கள். பொருள்களை ஏற்றிச் சென்று வாணிபம் நடத்துவார்கள். இந்தப் பற்பல தீவுகளிலும் வாழ்ந்த மக்களிடையே அதிகமான வேற்றுமை எதனையும் நான் காணவில்லை. ஒவ்வொருவருடைய பழக்க வழக்கங்களும். பேச்சும் கூட மற்ற தீவைச் சேர்ந்தவர்களுக்கும் புரிவதாயிருந்தது. இதனால் தான் இவர்கள் எல்லோரையும் நம் சமயத்தில் எளிதாகச் சேர்த்துவிடலாம் என்றும், இவர்களின் பேரரசரின் ஒப்புதல் கிடைக்கும் என்றும் நான் நம்பிக்கை கொண்டேன்.

ஜூலானா என்ற தீவு இங்கிலாந்தையும் ஸ்காட்லாந்தையும் சேர்த்துப்பார்த்தால் கூட அவற்றிலும் பெரியதென்றே சொல்லவேண்டும். இந்தத் தீவில் மேல்திசைப் பக்கம் இரண்டு மாநிலங்கள் உள்ளன. அவற்றிற்கு நான் செல்லவில்லை. இவற்றில் ஒன்றின் பெயர் அவான் என்பதாகும். இங்கு மக்கள் வாலுடன் பிறக்கிறார்கள்.