பக்கம்:கடல்வீரன் கொலம்பஸ்.pdf/74

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

72

வரையில் வைத்திருக்க உரிமையுண்டு. அங்கு ஆண்களை விடப் பெண்களே அதிகமாக உழைக்கிறார்கள். பெண்களுக்குத் தனிச் சொத்து உள்ளதா என்பதை இன்னும் நானறிந்து கொள்ளவில்லை. ஆனால், பொதுவாக ஒருவர் வைத்திருப்பதை எல்லோரும் பகிர்ந்து கொள்ளுகிறார்கள். முக்கிய உணவுப்பொருள்களில் இந்தப் பகிர்வு முறையைக் கைக்கொண்டிருக்கிறார்கள். இந்தத் தீவுகளில், பலர் எதிர் பார்த்தபடி அகோரப்பிறவிகள் எதையும் நாங்கள் காணவில்லை. இங்குள்ள மக்கள் எல்லோருமே நல்ல அழகிய தோற்றமுடையவர்களாயிருக்கிறார்கள். அவர்கள் கினியாவில் உள்ள நீக்ரோக்களைப் போல் இல்லை. நீண்ட கூந்தலையுடைய தலையுடன் காட்சியளிக்கிறார்கள். சூரியனின் கதிர்கள் நேராகப் பாயும் கடுமையான வெப்பமுடைய நாடு அல்ல என்றாலும், பூமத்தியரேகைக்கு 26 டிகிரி தள்ளியிருந்தாலும் சூரிய வெப்பம் இங்கு அதிகமாகத்தான் இருக்கிறது. உயர்ந்த மலைகள் மிகுந்திருப்பதால் வாடைக்காலம் குளிர் அதிகமாயிருக்கிறது. ஆனால் இங்குள்ளவர்கள் பழக்கத்தினாலும், சூடுண்டாக்கும் உணவுகளை உண்பதன் மூலமாகவும் குளிரைத் தாங்கிக் கொள்கிறார்கள்.

இந்தத் தீவுகளில் நான் இராட்சதப் பிறவிகள் எதையும் சந்திக்கவில்லை. ஆனால், இந்தியத் தீவுகளில் இரண்டாவதாக உள்ள தீவில் இருப்பவர்கள் மனித இறைச்சி தின்னும் பழக்கமுடையவர்கள். இவர்கள் வில்லும் அம்பும் ஆயுதமாக உடையவர்கள். இரும்பு கிடைக்காததால் அம்பின் நுனியில் கூர்மையான மரப்பலகையே அமைத்து வைத்துள்ளார்கள். மற்ற தீவுகளில் உள்ள மக்கள் அஞ்சிய இயல்புடையவர்கள். அவர்களிடம் இந்த மக்கள் கொடுமையாக நடந்து கொள்கிறார்கள். இவர்கள் பெண்களைப் போல் கூந்தல் வளர்த்துக்கொள்கிறார்கள். ஆனால், பிற தீவு மக்களுக்கும் இவர்களுக்கும் வேறு எவ்விதமான வேற்றுமையும் புலப்படவில்லை.