பக்கம்:கடல்வீரன் கொலம்பஸ்.pdf/86

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

84

கப்பல் கூட்டம் இரவில் கரைக்குச் செல்லவேண்டாம் என்று எல்லோருக்கும் ஆணையிட்டான் கொலம்பஸ். இரவில் வெகுநேரங் கழித்து சிவப்பு இந்தியர்கள் நிறைந்த ஓர் ஓடம் கப்பல்களை நோக்கி வந்தது. அந்த இந்தியர்கள் கொலம்பசை அடையாளம் கண்டு கொண்டார்கள். உடனே தலைவன் குவாக்கநாகரியின் சார்பாக பல பரிசுகளைக் கொடுத்தார்கள். நாவிடாடில் உள்ள ஸ்பானியர்களைப் பற்றி விசாரித்தபோது சில பேர் இறந்து விட்டதாகவும், மீதி எல்லோரும் நலமாக இருப்பதாகவும் உறுதியாகக் கூறினார்கள்.

ஆனால் அவர்கள் கூற்றில் ஏதோ ஒருவிதமான ஐயம் ஏற்படும்படியாக இருந்தது. கொலம்பஸ் தன்னுடன் கூட்டிச் சென்று. ஸ்பெயினில் கிறிஸ்தவனாக்கிய இந்தியன் டீகோகோன் அவர்களிடமிருந்து, உண்மையை வரவழைத்தான். என்ன பயங்கரமான உண்மை அது. அதைக் கேட்டுக் கொலம்பஸ் திடுக்கிட்டுப் போனான். அவன் உள்ளம் கொந்தளிப்படைந்தது.

அவர்கள் சொன்ன கதை இதுதான்

நாவிடாடில் இருந்த ஸ்பானியர்கள் நேர்மையற்ற முறையில், நடந்து கொண்டார்கள். தலைவன் குவாக்கநாகரி கொடுக்க முடிந்த அளவைக் காட்டிலும் அதிகமான தங்கம் பெற ஆவல் கொண்டு அவர்களில் இரண்டுபேர் ஒரு கூட்டத்தைச் சேர்த்துக் கொண்டு தீவைச் சுற்றிவந்தார்கள். மகுவானா இனத்தின் தலைவனான சோனாபோ விடம் அவர்கள் முறையற்ற முறையில் சென்று சண்டையிட்டுக் கொண்டார்கள். ஆத்திரக்காரனான அவன் அவர்களையெல்லாம் பிடித்துக் கொன்றுவிட்டான். அது மட்டுமல்லாமல் நாவிடாடுக்குப் படையெடுத்து வந்து அங்கிருந்தவர்கள் அனைவரையும் கொன்று விட்டான். தப்பியோடியவர்களையும் வேட்டையாடிக் கொன்றுவிட்டான்.