பக்கம்:கடல்வீரன் கொலம்பஸ்.pdf/89

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

87

ஆண்டு ஜனவரி மாதம் 2-ஆம் நாள் காற்றுத் தொந்தரவில்லாத ஒரு தீபகற்பத்தின் கரையில் கப்பல்கள் ஒதுங்கின. கொலம்பல மனஞ்சலித்துப் போயிருந்த காரணத்தினாலோ, அல்லது உடனடியாக ஒரு முடிவுக்கு வந்தாக வேண்டும் என்ற உந்துதலினாலோ, அந்த இடத்தையே குடியேற்றத்திற்குரிய பகுதியாகத் தேர்ந்தெடுத்தான்.

அந்த இடத்திற்கு அரசி இசபெல்லாவின் பெயரையே இட்டான்.

இசபெல்லா என்ற அந்த இடம் குடியேறி வாழ்வதற்குச் சற்றும் ஏற்ற இடமல்ல. முதலாவதாக அங்கு நல்ல குடி தண்ணீர் கிடைக்கவில்லை. அடுத்தபடியாக அங்கு மலேரியாக் காய்ச்சலைப் பரப்பும் கொசுக்கள் அதிகமாக இருந்தன. கப்பல்கள் ஒதுங்குவதற்கு நல்ல துறைமுகம் கூட இல்லை.

எல்லோரும் நகரம் உருவாக்கும் வேலையில் ஈடுபட்டார்கள். மரங்களை வெட்டி வீழ்த்தினார்கள். பவழப்பாறைகளை உடைத்துப் பெயர்த்தார்கள். பக்கத்தில் ஓடிய ஆற்றிலிருந்து நல்ல தண்ணீர் வருவதற்காகக் கால்வாய் வெட்டினார்கள். சமயத்திற்குப் பயன்படக் கூடியதாக சுமார் இருநூறு குடிசைகளைக் கட்டி முடித்தார்கள். ஆனால், கப்பலில் கொண்டு வந்த உணவுப் பொருள்களில் பாதிக்குமேல் வழியிலேயே தீர்ந்துவிட்டன. மீதியிருந்தவை போதுமானதாக இல்லை. மதுவும் பிற குடிவகைகளும் தீர்ந்து விட்டன. அங்கு கிணற்று நீரைத்தான் குடிக்க வேண்டியிருந்தது. தண்ணீர் ஒத்துக் கொள்ளாமல் நோய்வாய்ப் பட்டார்கள் சிலர். தின்று பழக்கமில்லாத மீனைத் தின்று வேதனைக்காளானார்கள் சிலர். மலேரியாக் காய்ச்சலுக்கு இரையாகித் துயரப்பட்டார்கள் சிலர். அங்குக் கிடைத்த உணவுப் பொருள்களைச் சமைத்தவுடன்