பக்கம்:கடல்வீரன் கொலம்பஸ்.pdf/93

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

91

அவர்கள் அடங்கி நடப்பார்கள் என்று காரணமும் குறிப்பிட்டிருந்தான்.

அவ்வளவும் சரிதான் ஆனால், கொலம்பஸ் சிவப்பு இந்தியர்களைப் பற்றிக் கொண்டிருந்த எண்ணம்தான் தவறாயிருந்தது. அவர்கள் யாரும் வணிகர்களல்ல நாகரிக மனப்பான்மையில்லாத அவர்களுடைய தேவைகளும் மிகக் குறைவேயாகும். வெள்ளையர்கள் கொண்டு சென்ற புதுப் பொருள்களை ஒரு முறை வாங்கிப் பயன்படுத்தியபின் அவர்கள் ஆவல் அடங்கிவிட்டது. மேற்கொண்டு வாங்க வேண்டிய தேவையோ ஆவவோ அவர்களுக்கு ஏற்படவில்லை.

டோரிசை ஸ்பெயினுக்கு அனுப்பிய பின், கொலம்பஸ், நூற்றுக்கணக்கான படைவீரர்களுடன், தங்கம் கண்டு பிடிக்க இசபெல்லாவிலிருந்து புறப்பட்டான். அழகு நிறைந்த வீகா ரீல் சமவெளியைக் கடந்து ஓர் ஆற்றங் கரையை அடைந்தனர். வழியில் தென்பட்ட கிராமங்களில் இருந்த இந்தியர்கள், தங்கப் பொடி நிறைந்த சிறு பைகளை அன்பளிப்பாகக் கொடுத்தார்கள். ஓடங்களிலும், இந்தியர்களின் தோள்களிலும் ஏறிக் கொண்டு ஆற்றைக் கடந்து கோர்டிலெரா மலையின் வடபுறத்தையடைந்தார்கள். அங்கு ஒரு மண் கோட்டை எழுப்புமாறு ஐம்பது ஆட்களை விட்டுச் சென்றான் கொலம்பஸ் அந்தக் கோட்டைக்கு, இஸ்பானியோலாவில் தங்கம் எங்கே கிடைக்கப் போகிறது என்று சொன்ன சாண்டோ தாமஸ் என்பவனின் பெயரையே சூட்டினார்கள். கோட்டையில் தங்கியவர்கள் போக மற்றவர்கள் மலை மீது ஏறித் தங்கம் எங்குக் கிடைக்கும் என்று ஆராய்ந்தார்கள். இசபெல்லாவிலிருந்து புறப்பட்டு இந்த ஆராய்ச்சி நடத்தி முடியும்வரை இருபத்தொன்பது நாட்களாயின. இந்த இருபத்தொன்பது நாட்களும் அவர்கள் பட்ட துன்பங்கள் சிறிதல்ல. பருவநிலை