பக்கம்:கடவுள் வழிபாட்டு வரலாறு.pdf/105

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

103


ஒர் ஆற்றல் மறைந்திருப்பதாக உய்த்துணர்ந்தனர்நம்பினர். அது நாளடைவில் கடவுள் வழிபாடாக மலர்ந்தது. இப்போதுள்ள மக்களுள் சிலரும், மரஞ் செடி கொடி புதர் உள்ள குறிப்பிட்ட இடத்தில் படையல் போட்டு வழிபாடு செய்வதைக் காணலாம். இம்மாதிரி வழிபாட்டை வாழையடிவாழையாக அன்று தொட்டு இன்று வரை சில குடும்பத்தினர் தொடர்ந்து செய்து வருகின்றனர். எங்கள் குடும்பத்திலும் என் தாயார் இருக்கும்வரை இத்தகைய வழிபாடு ஒன்று செய்து வந்ததை யான் அறிவேன். அரசு-வேம்பு மரங் களைச் சுற்றி வந்து வழிபடும் வழக்கம் ஈண்டு நினைவு கூரத்தக்கது.

கோயில் எழுந்த வரலாறு:

மக்கள், மரஞ்செடி கொடி யடர்ந்த புதரின் எதிரே முதலில் படையல் போட்டனர்; பின்னர், மண்ணாலோ சாணத்தாலோ கல்லாலோ ஒருவகை உருவம் அமைத் துப் புதரின் எதிரே வைத்து, அதைக் கடவுளாக எண்ணிப் படையல் போட்டு வழிபட்டனர். பின்னர் நாளடைவில் இத்தகைய இடங்களைச் சுற்றிக் கட்டடம் கட்டிச் சிறிய கோயில்களை உருவாக்கினர். பிறகு பிறகு சிறிய கோயில்கள் பெரிய கோயில்களாயின. இந்தியாவில்-தமிழ் நாட்டில் கடவுள் பிறந்த வரலாறும் கோயில்கள் எழுந்த வரலாறும் இந்த அடிப்படையிலே நிகழ்ந்தன. இதற்குத் தமிழ் நாட்டில் உள்ள பல சிவன் கோயில்கள் சான்று பகரும். காஞ்சிபுரம் ஏகாம்பர நாதர் கோயில் மாமரத்தின் அடியிலிருந்து மலர்ந்தது. சிதம்பரம் கோயில் தில்லை என்னும் மரத்தையும் மதுரைக் கோயில் கடம்ப மரத்தையும் அடிப்படை யாகக் கொண்டு எழுந்தன. மேலும் சில ஊர்களும் மரங்களும் முறையே வருமாறு: திருப்பனந்தாளும் திருப் பனையூரும் - பனை திருப்பெருந்துறை - குருந்தம்.