பக்கம்:கடவுள் வழிபாட்டு வரலாறு.pdf/106

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

104


திருமுல்லை வாயில்-முல்லைப்புதர். திருவாதவூரும் திருவொற்றியூரும்-மகிழமரம். திருவாலங்காடும் திருக் குற்றாலமும்-பலா. திருவாலம் பொழில்-ஆலமரம். திருவாவடுதுறை-அரசு. திருவானைக்கா-நாவல். திருவிடை மருதூர்-மருதமரம். திருவீழி மிழலை-விழிச் செடி. திருவைகாவூரும் திருவோமாம்புலியூரும் வில்வம். திருப்பாதிரிப் புலியூர்-பாதிரி மரம். திருநெல்வேலிமூங்கில்புதர். திருவாரூர் - புற்றிடம். அவ்வவ்வூர் மரத் தைத் தலவிருட்சம் (பதிமரம்) எனல் மரபு. அரசும் வேம் பும் இணைந்த அடியில் பிள்ளையார்கோயில் இடம் பெற்றிருப்பதைக் காணலாம். இற்றைக்குச் சுமார் இரண்டா யிரம் ஆண்டுகட்கு முன் வடமோதங்கிழார் என்னும் புலவர் பாடிய புற நானூற்றுப் பாடல் (260) ஒன்றில் காணப்படும்.

“கள்ளி நீழல் கடவுள் வாழ்த்தி”

என்னும் தொடர் ஈண்டு ஒப்பு நோக்கத் தக்கது. கள்ளிச் செடியின் நிழலிலேகூட கடவுள் உரு அமைத்தது வியக்கத்தக்க தன்றோ? அடுத்து, அவரைப் போலவே பழம் பெரும் புலவராகிய மதுரை மருதனிள நாகனார் பாடியுள்ள அகநானூற்றுப் பாடல் (297) ஒன்றிலுள்ள

“சூர்முதல் இருந்த ஓமையம் புறவு”

என்னும் அடியும் ஈண்டு ஒப்புநோக்கற் பாற்று. காட்டில் ‘ஒமை’ என்னும் மரத்தின் அடியில் கடவுள் இருப்பதாகப் புலவர் கூறியுள்ளார்.

(சூர்=கடவுள்; முதல்=அடிமரம், புறவு=காடு.) மரத்தின் அடிப்பகுதியில் கடவுள் உரு அமைக்கப்பட் டிருந்தது என்பது இதன் குறிப்பு.