பக்கம்:கடவுள் வழிபாட்டு வரலாறு.pdf/108

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

106


தமிழ் மக்கள் தண்ணிரைத் தாயினும் மேலாக மதித்து வழிபட்டு வந்தனர் என்பது உண்மையே ‘தாயைப் பழித்தாலும் தண்ணிரைப் பழித்தலாகாது’ என்னும் பழமொழியும் எப்படியோ எழுந்து விட்டது’ இதனால், மக்கள் சிலர், நல்ல தண்ணீர்-கெட்ட தண்ணீர் என்று பார்க்காமல், எந்தத் தண்ணிராயிருப்பினும் உட்கொள்ளவேண்டும் எனத் தவறான கருத்து கொண்டுள்ளனர். இவ்வாறு தவறாக எண்ணிக் கண்ட கண்ட தண்ணிரை உட்கொண்டு உடம்பைக் கெடுத்துக் கொள்ளக் கூடாது. இந்தப் பழமொழியின் பொருளை இனி வேறு விதமாகக் கொள்ள வேண்டும். இதில் இரண்டு நல்ல கருத்துக்கள் பொதிந்துள்ளன. ஒன்று: நீர் நிலைகளிலும் நீரோட்டத்திலும் உள்ள தண்ணீரைக் கெடுக்காமல் தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என்னும் அறிவுரை முதலாவது கருத்து. இரண்டாவது: தண்ணீர் பயனற்ற இடங்களில் பாய்ந்தும் கடலில் போய்க் கலந்தும் வீணாவதற்கு இனியும் இடம் தர லாகாது. தண்ணிரை நீர்த்தேக்கங்களில் தேக்கியோ - குளம், குட்டை, ஏரிகளில் நிரப்பியோ வைத்துக் கொண்டு, வேண்டியபோது வேண்டிய அளவு வயலுக் கும் மற்ற மரம் செடி கொடி வகைகளுக்கும் பாய்ச்சிப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் - என்பது இரண்டாவது கருத்து. எனவே, தாயைப் போலவே, தண்ணீரையும் போற்றிக் காத்துப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். தண்ணிர் தருகின்ற மாமழை போற்றுதும்!


ஐயனார் கோயில்

தென்னிந்தியாவில் மலைப் பகுதியிலும் காட்டுப் பகுதியிலும் தோப்புகளிலும் சோலைகளிலும் ஐயனார் கோயில்களை அமைத்திருப்பதை ஈண்டு மறக்க முடியாது.