பக்கம்:கடவுள் வழிபாட்டு வரலாறு.pdf/130

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

128


அந்தோ கொடுமை! அடுத்து, பெயர் அறியப்படாத புலவர் ஒருவர் பாடிய புறப்பாட்டுப் (263) பகுதி வருமாறு:-

‘இரும்பறை இரவல சேறி யாயின்
தொழாதனை கழிதல் ஒம்புமதி வழாது . .
கொல்புனல் சிறையின் விளங்கியோன் கல்லே”

என்பது பாடல் பகுதி. கருத்து: ‘பறை கொட்டும் கலைஞனே! வீரனது நடுகல் இருக்கும் வழிப் பக்கம் செல் வாயாயின், அந்நடுகல்லைத் தொழாமல் விட்டுவிடாதே; தவறாமல் தொழுது செல்வாயாக’, என்பது கருத்து. இது, கலைஞன் ஒருவனுக்கு வேறொருவர் அறிவுறுத்துவது போல் அமைந்துள்ளது இப்பாடலால், நடுகல்லை, அவ்வழியே போபவர் வருபவர் எல்லாரும் தொழுவது வழக்கம் என்னும் செய்தி கிடைக்கிறது. அடுத்து, உறையூர் இளம் பொன் வாணிகனார் பாட்டு (264) வருமாறு:


“பரலுடை மருங்கிற் பதுக்கை சேர்த்தி
மரல்வகுந்து தொடுத்த செம்பூங் கண்ணியொடு
அணிமயில் பீலி சூட்டிப் பெயர் பொறித்து
இனிகட் டனரே கல்லும் கன்றொடு
கறவை தந்து பகைவ ரோட்டிய
நெடுந்தகை கழிந்தமை அறியாது
இன்றும் வருங்கொல் பாணரது கடும்பே”


என்பது பாடல். கருத்து: ‘வீரன் போர் புரிந்து மாண்டான்; அவனுக்குப் பருக்கைக் கற்கள் கலந்த மணல் குன்றின் மேல் கல் நட்டனர்; கல்லில் பெயர் பொறிக்கப்பட்டுள்ளது; மேலே மரல் கீறித் தொடுத்த சிவந்த மலர் மாலையும் மயில் பீலியும் அணியப்பட்டுள்ளன. ஆனால்