பக்கம்:கடவுள் வழிபாட்டு வரலாறு.pdf/141

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

139


என்பன பாடல்கள். குறிக்கோளுக்காக உயிர் நீத்த கோப்பெருஞ் சோழனுக்குக் கல் எடுத்ததல்லாமல், நட்புக்காக உயிர் நீத்த புலவர் பொத்தியார்க்கும் கல் எடுத்தமை குறிப்பிடத் தக்கது. பொத்தியாரைப் போலவே, கோப்பெருஞ் சோழன் மாட்டுப் பெரு நட்பு கொண்டிருந்த பிசிராந்தையார் என்னும் புலவரும் வடக்கிருந்து உயிர் நீத்ததாக வரலாறு கூறுகின்றது.

கற்புக் கண்ணகி வழிபாடு

வீரத்துக்காகவும் உயரிய குறிக்கோளுக்காகவும் மாபெரு நட்புக்காகவும் உயிர் நீத்தோர்க்குக் கல் எடுத்ததல்லாமல், மறக்கற்புடைய மகளிர்க்கும் சிலை வைத்துக் கோயிலெடுத்து வழிபட்ட வரலாறு பண்டே நிகழ்ந் துள்ளது. ஒர் எடுத்துக்காட்டு:- தமிழ்நாட்டில் குற்ற மற்ற தன் கணவன் கோவலனைக் கொலை செய்வித்த பாண்டிய மன்னனோடு வாதிட்டு வழக்கில் வென்று இறுதியில் சேர நாடு சென்று கணவனது பிரிவாற்றாது உயிர் துறந்து மறக் கற்புடைய மகளாய் விளங்கிய கண்ணகி என்பவளுக்குச் சேரன் செங்குட்டுவன் என்னும் மன்னன் சிலை செய்து வைத்துக் கோயில் கட்டி வழி பட்ட வரலாறு தமிழ் மக்கள் அறிந்ததே. இவ்வரலாறு, இளங்கோவடிகள் இயற்றிய சிலப்பதிகாரம் என்னும் தமிழ்க் காப்பியத்தில் விரிவாக விளக்கப்பட்டுள்ளது. இக் காப்பியத்தின் மூன்றில் ஒரு பகுதியும் இறுதிப் பகுதியும் ஆகிய வஞ்சிக் காண்டம் முழுவதிலும் கண்ணகி வழிபாட்டு வரலாறே இடம்பெற்றுள்ளது. மன்னன் செங்குட்டுவன், இமயமலையிலிருந்து கல்வெட்டிக் கங்கை -யில் நீராட்டி, தமிழ் நாட்டின் ஒரு பகுதியாகிய தனது சேர நாட்டிற்குக் கொண்டு வந்து சிலையாகச் செய்து நட்டுக் கோயில் எடுத்து வழிபட்டதாக வஞ்சிக் காண்ட வரலாறு கூறுகிறது. நடுகல் வழிபாடு தொடர்பாகத் தொல்காப்பியம் என்னும் இலக்கண நூலில் கூறப்பட்