பக்கம்:கடவுள் வழிபாட்டு வரலாறு.pdf/158

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

156


யார் யார் எதிர் காலத்தில் கடவுளர்களாக மாற இருக் கின்றார்களோ - தெரியவில்லை.

இதுகாறும் பல்வேறு கோணங்களில் நின்று விளக்கிய சான்றுகளால், கட்வுள் என்பது ஒருவகைக்கற்பனைப் படைப்பே-அரும் பெருஞ் செயல்கள் ஆற்றிய ஆன்றோர் களே கடவுளர்களாக ஆக்கப்பட்டனர்-அவர்கட்கு முன்பு, பல்வேறு இயற்கைப் பொருள்களே கடவுள்களாக வழிபடப்பட்டன-நாளடைவில் கடவுள் வழிபாடு படிப் படியாக வளர்ந்து, இப்பொழுது உள்ள பெரிய நிலையை அடைந்துவிட்டது-என்னும் உண்மை தெளிவாகும்.

வழிபாடு :

இப்போது மக்கள் ஒருவரை ஒருவர் நேரில் கண்டால் வணக்கம் செய்து கொள்கின்றனர். உயர்ந்த பண்பாளர்கள் தாழ்ந்த இயல்பினரைக் கண்டாலும் முறைப்படி வணக்கம் செய்கின்றனர். இதுவே இப்படி என்றால், தெய்வமாக மாறியவர்களை- மனிதத் தெய்வங்களை வணங்குவதில் தவறு ஏதும் இல்லை. அந்தத் தெய்வங்களின் பெயரால் உள்ள கோயில்களில் வழிபாடு செய்வதும் தவறு இல்லை. ஆனால், வழிபாடு என்னும் பெயரில், ஆரவாரச் செயல்களும் செலவுகளும் வேண்டா. வழிபாடு ஒன்றே போதும். அத்தெய்வங்களாக உயர்ந்தவர்களிடத்தில் இருந்த உயர் பண்பை, வழிபடுபவர்களும் கடைப்பிடித்து ஒழுக வேண்டும். பக்தி என்னும் பெயரால் வழிபடும் பலரிடத்தில் பண்பு இல்லை. பக்தியினும் உயர் பண்பே இன்றியமையாதது. கடவுள் வழிபாடு செய்து கொண்டே இழி செயல்கள் புரிபவர்களினும், கடவுள் வழிபாடு செய்யாமல் உயரிய செயல்கள் புரிபவர்கள் உயர்ந்தவர்கள் ஆவர். கடவுள் வழிபாட்டின் நோக்கமும் பயனும் உயரிய நெறியில் நின்று ஒழுகி உயர் நிலை பெறுவதாகும்; அதுவே வீடுபேறு ஆகும்,