பக்கம்:கடவுள் வழிபாட்டு வரலாறு.pdf/44

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

42


அவதார நம்பிக்கையினால், - சாதாரண மக்களுக்கு எந்தவித ஆற்றலும் இல்லை-அச்சாதாரண மக்களால் எந்த அரும்பெருஞ் செயலும் ஆற்ற முடியாது. கடவுள் மனிதராய் வந்தால்தான் பெரிய அற்புதங்களை நிகழ்த்த முடியும்-என்பதாக, தன்னம்பிக்கையில்லாத ஒரு வகை மனப்பான்மை மக்கள் இனத்தில் குடிகொள்ளும்; அதனால், அரும்பெருஞ் செயல்கள் புரியக் கூடிய ஆற்றல் உடையவர்களும், நாம் கடவுளா என்ன நம்மால் பெருஞ்செயல் எதுவும் புரியமுடியாது எனச் சோர்வுறக் கூடும். கடவுள் வந்து எந்த அற்புதங்களும் நிகழ்த்தவில்லை - அவதார மாந்தர் எனப்படுபவர் நம்மைப் போன்ற சாதாரண எளிய மனிதரேயாவார்- எனவே, நாமும் முயன்றால் அற்புதங்கள் பல நிகழ்த்த வியலும்-என்ற தன்னம்பிக்கை மக்கள் இனத்தின் மனத்தில் வேர் ஊன்றினால்தான், அந்த நம்பிக்கையின் அடிப்படையில், யாரும் முயன்று எந்த அற்புதமும் நிகழ்த்த முடியும். இதனால், அவதார மாந்தர் எனப்படுபவர் போன்ற பெரியார்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டு போகும். இதனால் மக்கள் இனம் முழுவதும் விரைவில் மாண்புற முடியும். அறிவியல் அடிப்படையில் பகுத்தறிவு கொண்டு சிந்திக்கின் இதன் உண்மை விளங்கும்.