பக்கம்:கடவுள் வழிபாட்டு வரலாறு.pdf/51

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

49


பாலில் நெய்போல் என்னும் ஒப்புமையை நம்மாழ்வாரும் திருவாய் மொழியில் கூறியுள்ளார்:


‘சிறந்த கால்தீ நீர்வான் மண்
பிறவும் ஆய பெருமானே கறந்த பாலுள் நெய்யே போல்
இவற்றுள் எங்கும் கண்டுகொள்”.


என்பது அவரது பாடல் (8-5-10) பகுதியாகும். செக்கில் இட்டு ஆட்டினால், வெளிவருகிற எள்ளுக்குள் எண்ணெய் என்னும் உவமையை மாணிக்கவாசகர் மொழிந்துள்ளார்:

“கள்ளும் கீழுளும் மேலுளும் யாவுளும்
எள்ளும் எண்ணெயும் போல்கின்ற எங்தையே”

(திருவாசகம்-திருச்சதகம்-46)


என்பது இவரது பாடல் பகுதி. எனவே, கடவுள் உண்டு; அவர் மறைந்துள்ளார்-என்பதாகக் கூறுகின்றனர். ஆத்திகர் கூறும் மற்றும் ஒரு கருத்தையும் ஈண்டு மறப்பதற்கில்லை. அஃதாவது:-தந்தையின்றி மைந்தர் எவ்வாறு பிறக்க முடியும்? தச்சரும் கொல்லரும் இன்றிக் கருவிகள் எவ்வாறு உண்டாக முடியும்? கொத்தனார் இன்றிக் கட்டடம் எவ்வாறு எழும்பும் நெய்வோர் இன்றித் துணிகள் இல்லை. தீட்டுவோர் இன்றி ஒவியம் ஏது? ஆட்டுவோர் இன்றிப் பதுமைகள் ஆடுமா? மீட்டுவோர் இன்றி யாழிசை ஏது? உழவர் இன்றி உணவுப் பொருள்களும், தொழிலாளர்கள் இன்றி மற்ற பொருள்களும் எவ்வாறு உண்டாகும்? எல்லாவற்றுக்கும் காரணங்கள் வேண்டும். காற்று இன்றி மரம் அசையுமா? தீ இன்றிப் புகை உண்டா? மலர் இன்றி மணம் ஏது? காரணம் இன்றிக் காரியம் நடைபெறாது. இவை போலவே, மூல காரணர் ஒருவர் இல்லாமல் உலகங்களும் உயிர்களும் உண்டாகியிருக்க முடியாது.