பக்கம்:கடவுள் வழிபாட்டு வரலாறு.pdf/69

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

67


அடுத்துச்.சிவ வாக்கியர் என்னும் சித்தர் இதுபற்றிக் கூறியுள்ள பாடல் ஒன்று வருமாறு:

“நட்ட கல்லைத் தெய்வமென்று காலுபுட்பம் சாத்தியே
சுற்றி வந்து மொண் மொணென்று சொல்லு மந்திரம் ஏதடா?
நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்?
சுட்ட சட்டி சட்டுவம் கறிச்சுவை அறியுமோ?’’

சிவ வாக்கியர் பாடல்-520.


கடவுளைக் கோவிலிலோ வேறெங்குமோ காண முடியவில்லை; கடவுள் உயிர்களின் உள்ளத்தில் உள்ளார் எனக் கவிமணி கூறியுள்ளார்.

நாம் கடவுள் என்று எண்ணி வழிபடும் கல் சிலையிலும் செம்புச் சிலையிலும் கடவுள் இல்லை; சொல்லிலும் சுருதியிலும் அன்பர் உள்ளத்திலும் கடவுள் உள்ளார் எனப் பட்டினத்தார் கூறியுள்ளார்.


கடவுள் உள்ளத்துள் உள்ளார்; நட்ட கல்லில் கடவுள் இல்லை; கல் பேசாது; கல்லுக்குச் செய்யும் பூசனைகள், பயனற்றவை. கறி காய் ஆக்கிய சட்டியும் அதை எடுத்து இடும் அகப்பையும் (சட்டுவமும்) கறி காயின் சுவையை அறியாதது போலவே, எந்த வழிபாட்டையும்-பூசனையையும் நட்ட கல் அறியாது-என்று சிவ வாக்கியர் என்னும் சித்தர் ஆணித்தரமாக அறைந்துள்ளார்:


கடவுள் கொள்கையின் தோல்வியை இந்தப் பெரியவர்கள் ஒத்துக் கொண்டுள்ளனர்; கடவுள் வெளியில் எங்கும் இல்லை என்று உறுதியாகக் கூறியுள்ளனர்; வேறு வழியின்றி, உள்ளத்துள் உள்ளார் என்று உரைத்துள்ளனர். இது ஒப்புக்குக் கூறியதேயாகும்.