பக்கம்:கணிப்பொறி அகராதி.pdf/5

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
சொல்வளம்

பதிப்புச்செம்மல் ச. மெய்யப்பன்

நிறுவனர்: மெய்யப்பன் தமிழாய்வகம்

ஒவ்வொரு மொழிக்கும் அடிப்படையாக அமைந்துள்ள சொற்கள் அம்மொழியின் வளத்தைக் குறிப்பன: அவற்றின் எண்ணிக்கையைப் பொறுத்தே அம்மொழியின் பயன்பாடு மிகும். வாழும் மொழி நாளும் நாளும் புதிய சொற்களைத் தம்முடைய இருப்போடு வரவு வைத்துக்கொள்ளும். வரவு பெருகப் பெருக வலிமை கூடும்; வளம் சிறக்கும். வளரும் மொழி அன்றன்று புதிதாய்த் தோன்றும் புதிய பொருள்களுக்கேற்பப் புதிய சொற்களை உருவாக்கிக்கொள்ளும். இதனையே பாரதி சொல் புதிது பொருள் புதிது என்பான் கடன் சொற்களைக் கூடத் தன்னியல்புக்கேற்ப தன்மயமாக்கி, அகராதிப் பேரேட்டில் சொற்குவியலைப் பெருக்கிக் கொள்ளக்கூடிய மொழிகள் சிலவற்றுள் தமிழ் தலைமை சான்றது. சொல்லில் உயர்வு தமிழ்ச்சொல்லே என்பான் பாரதி

ஆட்சியியல், அறிவியல், பொறியியல், மருத்துவம், அழகியல், நுண்கலைகள் முதலிய துறைகளில் 25000க்கு மேற்பட்ட புதிய கலைச் சொற்களை கலைச் சொல் ஆய்வாளர்கள் பட்டியலிட்டுள்ளனர்.

அறிவியலில் மாபெரும் புரட்சி கணினி. கணினி இன்று விசுவரூபம் எடுத்து எங்கும் நீக்கமற நிறைந்திருக்கிறது.