பக்கம்:கணிப்பொறி அகராதி.pdf/6

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

எட்டுத்திக்கும் சென்று புதிய கலைச் செல்வங்களைக் கொண்டுவந்து சேர்ப்பது மொழிக்கு முதன்மையான கடமை என பாரதி வேண்டுகோள்விடுத்தான். மேற்கில் மெத்த வளர்ந்துவரும் பஞ்சபூதத்து இயற்கையைச் சொல்லும் திறம் தமிழுக்கு உண்டு என்பதை மெய்ப்பிக்கும் வகையில் இன்று துறைதோறும் அகராதிகள் தொகுக்கப்பெற்று வருகின்றன. மணிவாசகர் பதிப்பகம் தோன்றிய நாள்தொட்டே வெளியீட்டுக் கொள்கையுடன் வீறுநடை போடுகிறது.

அடிநாள் தொட்டே அகராதிகளுக்கு முதன்மை கொடுத்து வெளியிட்டு வருகிறது.

     அறிவியல் அகராதி
     நாட்டுப்புறஇயல் கலைச்சொல் அகராதி
     மொழியியல் கலைச்சொல் அகராதி
     மானிடவியல் கலைச்சொல் அகராதி
     ஐம்பொறி அகராதி
     எதிர்ப் பத அகராதி
     வேதியியல் அகராதி
     இயற்பியல் அகராதி
     வணிகவியல் அகராதி
     தமிழ் அகராதி
     ஆங்கிலம் - தமிழ் மெகா அகராதி

என பல்துறை அகராதிகளை வெளியிட்டுள்ளது. நாளும் பெருகிவரும் சொற்கூட்டத்தை வகைப்படுத்தி, தொகைப்படுத்தி தமிழுக்கு வளம்சேர்க்கும் பதிப்பகம். இன்று யுகப்புரட்சி செய்துள்ளது கணினி. கணினி கால்வைக்காத இடம் இல்லை. கணினியில் கை வைக்காதவர் எவரும் இலர். அகண்டு விரிந்துள்ள கணினி உலகின் மர்ம முடிச்சுகளை எவரும் எளிதில் தெரிந்து கொள்ளும் வண்ணம் இந்தக் கணினி கலைச்சொல் அகராதியை மிகுந்த பொறுப்புணர்ச்சியுடன் வெளியிடுகிறோம்.

அகராதிகளை மிகச் சிறப்பாக வெளியிடுவதில் பெயரும் புகழும் பெற்ற மணிவாசகர் பதிப்பகம் இந்தக் கணிப்பொறி அகராதியைத் தமிழ்கூறும் நல்லுலகுக்கு வழங்குகிறது.

இப்பதிப்பக அகராதிகள் நம்பகத்தன்மை உடையவை. சரியான பொருள், துல்லியம், அளவு முதலியவற்றில் ஒரு ஒழுங்குநெறி இவ்வகராதி உருவாக்கத்தில் கடைப் பிடிக்கப்பட்டுள்ளது. பொருண்மைக்கு முதன்மை. பல்வகைப் பயன்பாடு என்ற நிலையில் இவ்வகராதிகள் உருவாக்கப் பெற்றுள்ளன.