பக்கம்:கண்ணகிக் கதை.pdf/23

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
24

கண்ணகி கதை

அன்னவன் அன்புநீர் வற்றியத னாலே
மின்னவள் கண்ணகி மனப் பயிரின் வாட்டம்
சிற்றடி யணியும்நற் சிலம்பணி இகழ்ந்தாள்
உற்றதுடி இடையணி மேகலை இழந்தாள்
காதணி கழுத்தணி அனைத்தையும் இழந்தாள்
போதனைய கண்களில் தீட்டுமை யொழிந்தாள்
திங்கள்போல் நெற்றியில் திலகம் ஒழிந்தாள்
அங்கவள் கூந்தலில் அணிநெய் யொழிந்தாள்
மனத்தமர் காதலன் மாண்புடைய கோவலன்
இனிக்கவுளம் என்றைக்கு வருவனென்று ஏங்கினாள்
கடவுளைக் கண்டிடக் கடுந்தவம் இயற்றிடும்
திடமுள்ள தவசிபோல் திருமனை இருந்தாள்

வசனம்

இங்ஙனம் கணவனைப் பிரிந்து கடுந்துயரம் அனுபவிக்கும் கண்ணகிக்கு ஆருயிர்த்தோழி ஒருத்தி இருந்தாள். அவள் பார்ப்பனக்குலத்தில் பிறந்த பாவை -பிராமணத்தி. அந்தக் காவிரிப்பூம்பட்டினத்திலேயே பிறந்து வளர்ந்த பெண். தேவந்தி என்ற பெயரையுடையவள்.இளமை முதற்கொண்டே கண்ணகியுடன் பழகி நட்புக்கொண்டநங்கை.இத்தேவேந்தியும் கணவனைப் பிரிந்து வருந்தும் காரிகையாவாள். ஆதலால் கணவனைப் பிரிந்த பெண்களின் மனநிலையை அனுபவத்தில் கண்டறிந்தவள்.இப்போது கண்ணகியின் நிலைகண்டு கலங்கினாள்.கனலிடைப்பட்ட மெழுகென உள்ளம்உருகினாள்.ஆறுதல் மொழிகளால் கண்ணகிக்குத் தேறுதல் கூறுவாள். தேவந்தியின் அன்பு மொழிகள் கண்ணகியின் உள்ளத்திற்கு அமைதி யளித்தன. அவளிடம் கண்ணகி, தனக்கு உற்றதையுரைத்து உள்ளந்தேறுவாள்.

______________________________

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கண்ணகிக்_கதை.pdf/23&oldid=1306834" இலிருந்து மீள்விக்கப்பட்டது