பக்கம்:கண்ணகிக் கதை.pdf/33

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



34

கண்ணகி கதை

மாதவி மயக்கால் மதியினை இழந்தேன்
பாதகம் பலப்பல பாவிசெய் திட்டேன்
ஊழ்வினை உருத்ததை ஓதிடவும் நாணம்
பாழ்போன செல்வமோ பருங்குன்று போலும்
இழிவான வழிசென்ற எனையேற்க லானாய்
பழியற்ற மாதுனைப் பதைத்திடச் செய்தேன்
செல்வக் களிப்பாலே சிந்தைதடு மாறினேன்
செல்வம் அழிந்தது தெளிவும் பிறந்தது
வறுமையின் பெருமையோ சிறுமையைத் தந்தது
ஒருபோதும் இனிமேல் உன்னையான் பிரியேன்

வசனம்

என்று இவ்விதமாகக் கோவலன் கழித்த செய்திகட்காக மனம்வருந்தி இரங்கிப் பலமொழிகளைக் கண்ணகிபால் சொன்னான். அது கேட்ட கண்ணகியோ, "நம் கணவர்க்கு, மாதவிக்குக் கொடுக்கப் பொருள் இல்லாமையால் இங்ஙனம் புலம்பி வருந்துகின்றார்போலும் ; அதனால்தான் வறுமை வெட்கம் தருகின்றது என்கிறார்" என்று நினைத்தாள். அதற்காகக் கணவன்மேல் வெறுப்போ கோபமோ கொள்ளவில்லை. கணவன் கவலையை ஒழிக்க வழி தேடினாள். மார்பில் விளங்கும் மங்கல நாணைத்தவிர மற்றோர் அணிகலனைக் காணவில்லை. சற்று எண்ணமிட்டு நின்றாள். மற்றோர் அறையுள்ளே சென்றாள். அங்கிருந்த காற்கிலம்பு ஒன்றைக் கொண்டுவந்தாள்.

பாட்டு

ஆருயிரென் நாயகரே!
அருங்கவலை கொள்ளவேண்டாம்
சீருடைய சிலம்பிரண்டு
செல்வமுறப் பெற்றுள்ளேன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கண்ணகிக்_கதை.pdf/33&oldid=1296496" இலிருந்து மீள்விக்கப்பட்டது