பக்கம்:கண்ணகிக் கதை.pdf/5

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



மு ன் னுரை

நெல்லை நாட்டில் தோன்றிப் பல்லோரானும் பாராட்டப்பெறும் வில்லிசையில் நல்ல வரலாறுகள் பயிலப்பெற்றால் பாமரரும் பைந்தமிழ்ப் பேரறிவைப் பெறுதற்கு உறுதுணயாகும். இந்த உண்மையைத் திண்மையுறக் கண்டு தெளிந்த திருவாளர் வ.சுப்பையா பிள்ளையவர்கள் வில்லிசைக்குரிய நல்ல வரலாறுகளை வெளியிட்டு வருகிறார்கள். அவர்கள் அளித்த ஊக்கத் தின் அரும்பயனாய் எளியேனால் ஆக்கப்பெற்ற தமிழ் வளர்ந்த கதையும், திருவள்ளுவர் கதையும், கழக வாயிலாக வெளிவந்துள்ளன.

இப்போது மூன்றாவது கதையாக, முத்தமிழ்க் காவியமாகிய சிலப்பதிகாரத்தைக் 'கண்ணகி கதை' என்னும் பெயருடன் இயற்றித் தந்துள்ளேன். கண்ணகியின் வரலாற்றைப் பல்வேறு மாற்றங்களுடன் காட்சி யில் கண்டும், கதைகளில் கேட்டும் வருகின்ற சிலர்க்கு இந்நூல் உண்மை வரலாற்றை உணரத் துணைபுரியும் என்பதில் ஐயமில்லை. இதனை வில்லிசைத் துறையில் வல்லமையுள்ளாரும், பிற நல்லறிஞரும் ஏற்றுப் போற்றுவர் என்னும் எண்ணமுடையேன். இதனை வெளியிட்டுதவும் கழகத்தார்க்கு எனது கனிந்த நன்றி.

தமிழ் வெல்க !
அ. க. நவநீதகிருட்டிணன்
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கண்ணகிக்_கதை.pdf/5&oldid=1296388" இலிருந்து மீள்விக்கப்பட்டது