பக்கம்:கண்ணாயிரத்தின் உலகம்.pdf/14

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

உலகம்

15

[இளைஞன், அவசர அவசரமாக, வாயில் இருந்த சிகரெட்டை ஒருபுறம் வீசிவிட்டு வெளியே வருகிறான். வேலையாள், 'பாலிஷ்' போட்ட 'பூட்சை' காலருகே கொண்டு செல்கிறான். அதைக்கண்டு...]

புறப்பட்டாச்சா!... வீடு வந்து அரைமணி நேரம் கூட ஆகல்லே; மறுபடியும் வெளியே! ஏண்டா, கண்ணாயிரம்! உனக்கு எதுக்காகடப்பா இந்த வீண் அலைச்சல்? வீடு இருக்கு, அரண்மனைபோல; தோட்டமிருக்கு, நந்தவனம்போல; சொத்து இருக்கு, சுகம்தர; நிம்மதியா வீட்டிலே இருக்கக்கூடாதா...

[கண்ணாயிரம் 'பூட்ஸ்' போட்டுக்கொண்டே]

கண்.: நாம, நம்ம நிம்மதியை மட்டும் கவனித்துக் கொண்டா போதுமா?... ஊருக்கு உபகாரம் செய்ய உழேக்கறதுதான் உத்தமர்கள் கடமைன்னு நீயே சொல்லி இருக்கியே அத்தே! இப்ப நான் என்ன, உல்லாசத்துக்காகவா ஊர் சுத்தப் போறேன்?...

மாது: என்ன வேலையோ, என்ன கடமையோ! பலபேர் என்னைக் கேட்கறாங்க. ஏன் அன்னபூரணி கண்ணாயிரம் இப்படி அலையறதுன்னு. ஒவ்வொரு நாளுமா வேலை இருக்கும் உனக்கு...

கண்.: இன்னும் ஒரு பத்துநாள், இப்படி அப்படித் திரும்பக்கூட நேரம் கிடையாது. நடன விழா ஏற்பாடு. விழா எதுக்காக? ஏழைப் பிள்ளைகளைப் படிக்கவைக்க!...

அன்ன.: நல்ல காரியந்தான்! உங்க அப்பாவிடம் சொல்லி, ஒரு ஆயிரம் ஐநூறு வாங்கிக் கொடுத்துவிடு...தர்ம காரியம்... வேண்டாம்னா சொல்வேன்? நீ எதுக்காக அலையவேணும்?

கண்.: (சிறிதளவு குறும்புத்தனத்துடன்) யாரிடம்? அப்பாவைக் கேட்டா? நல்லா கொடுப்பாரே! பணம்னு கேட்ட உடனேதான் அப்பா முகத்திலே எள்ளும் கொள்ளும் வெடிக்குமே!