இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
54
கண்ணாயிரத்தின்
[நாடியா அவருடைய பேச்சு வெறும் நடிப்பு என்பதை எப்படி உணரமுடியும். அவ்வளவு இயற்கையான—உயர்தரமான நடிப்பை அவள் கண்டதே இல்லை. நாடியா படபடப்பாகப் பேசுவாள். அதிலே சுவையிருப்பதாகப் பலர் கூறியதால் அவ்விதமான பேச்சினைப் பழகிக் கொண்டாள். பிறகு அது பாதிச் சுபாவமாகிவிட்டது. ஆத்திரம் பீறிட்டுக் கொண்டுவரும், உள்ளத்தில் எழுவதை அடக்கிக் கொள்ளத் தெரியாததால்! அந்த ஆத்திரம் பொறி பறக்கும் சொற்களாகவோ, பொலாபொலவென உதிரும் கண்ணீராகவோ மாறும். சிரிப்பாள் கலகலப்பாக; மிகச் சாதாரண வெற்றியிலேகூட மிகப் பெரிய சுவை காண்பாள். இவ்வளவுதான் அவளுக்குத் தெரியும். சிங்காரவேலர் போன்ற, 'பிறவி நடிகர்'களை அவள் எங்கே கண்டிருக்கிறாள்? அந்த நடிப்பு அவள் மனதைத் தொட்டு விட்டது. அதிலும் அவர், தன்னைப் பார்த்து, 'நீ என் மகள்போல' என்று சொன்னது நாடியாவைத் திக்குமுக்காடச் செய்து விட்டது. தழதழத்த குரலில்]
நாடி: ஆ! என்ன, என்ன!...மகள் போல...மகள் போல...
சிங்: ஓஹோ! மருமகள் என்று சொல்லியிருக்க வேண்டுமா... குடும்ப கௌரவத்துக்காகத்தான் உன்னை மருமகளாக்கிக் கொள்ள முடியவில்லை...வா, நாடியா...
[சிங்காரவேலர் நாடியாவைத் தன் மோட்டாரிலேயே அழைத்துக்கொண்டு செல்கிறார்; ஊருக்கு. ஒதுக்குப்புறமான இடத்தைக் கடக்கிறார்கள். அங்கு சிங்காரபுரி என்ற பெயர்ப்பலகை அமைந்த நுழைவு வாயில் தெரிகிறது. உட்பக்கத்தில் சில நூற்றுக்கணக்கான குடிசைகள் உள்ளன.