பக்கம்:கண்ணாயிரத்தின் உலகம்.pdf/67

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

68

கண்ணாயிரத்தின்

ஒரு வார்த்தை பேசியிருக்கிறானா என்னைப் பத்தி, கேவலமா...ஏண்டா! ஊமையா நிக்கறே...எந்தப் பயலாவது பேசுவானா...

கண்: (தன்னை விடுவித்துக் கொண்டு) எப்படிப் பேசுவான்... பேசினா...தொலைத்து விடுவீர்களே என்ற பயம். உடனே ஏவிவிட மாட்டீர்களா அடி, உதை, குத்து, வெட்டுன்னு...வியாபாரியா இருந்தா தீர்ந்தது, 'திவாலா'வான்..விவசாயியா இருந்தா பயிரிலே மாடு மேயும்; வைக்கப் போரிலே தீப்பிடிக்கும். களஞ்சியத்திலே கொள்ளை நடக்கும்...தெரியுமே, எல்லோருக்கும்..தெரிஞ்சி எவன் உங்க எதிரிலே துணிஞ்சிப் பேசுவான்...

சிங்: அக்கா! கேட்டாயா...அவன் பேசறதை கேட்டயான்னேன்...ஒண்ணே ஒண்ணு. கண்ணே கண்ணுன்னு சொல்றயே...பார்த்தாயா அவன் பேசியதை. ஊரிலே ஒரு பயலும் சொல்லத் துணியாததைச் சொல்றான். ஏண்டா! காலிகளை ஏவி, கொல்லச் சொல்றேன், கொளுத்தச் சொல்றேன்...ஏண்டா! அப்படித்தானே?

[கண்ணாயிரம் பேசாதிருக்கக் கண்டு சிங்காரவேலர் மேலும் ஆத்திரம் கொண்டு அவன் அருகே செல்கிறார். பயந்துவிட்ட அன்னபூரணி தடுத்து நிறுத்துகிறார்கள்.]

அன்: எவனாவது உன்னை ஏதாவது ஏசி இருப்பான்...காதிலே விழுந்திருக்கும். அதைச் சொல்ல வேண்டிய முறை தெரியாததாலே, எப்படியோ சொல்லிவிட்டான்.

சிங்: ஓங்கி கன்னத்திலே அறையாமே அப்படிப்பட்ட கழுதையை, இங்கே வந்து என்னைக் கேவலமாப் பேசறதா? ஒரே மகனல்லவா, ஒரே மகன்! உயிருக்கு உலையா வந்திருக்கிறான். கொஞ்சமான பணமா பாழாகுது இவனாலே...

கண்: அந்தப் பணம் அப்படித்தான் பாழாகும்...

[சிங்காரவேலர் முறைக்கிறார்]