பக்கம்:கண்ணாயிரத்தின் உலகம்.pdf/68

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

உலகம்

69

என்று ஊரிலே பேசுகிறார்கள். ஏழை வயிறு எரிய எரியச் சேர்த்த பணம்தானே! அது இப்படித்தான் பாழாகும் என்கிறார்கள்...எனக்கே கேட்க வெட்கமாக இருக்கிறது...

[ஆத்திரம் தாங்காமல், சிங்காரவேலர், கண்ணாயிரத்தின் கன்னத்தில் பளார், பளார் என்று அறைகிறார்.]

சிங்: இருக்காதே என் எதிரில்...வெட்டிப் போட்டு விடுவேன்...எனக்கு ஒரு மகன் பிறக்கவில்லை என்று எண்ணிக் கொள்வேன். ஏழைக்காகப் பரிந்து பேசுகிறாயா, ஏழைக்காக! பெரிய மகான்! மடப்பயலே! என்னால் எத்தனை ஏழைக் குடும்பங்கள் பிழைக்கின்றன தெரியுமா? எத்தனை வீடுகளில் நான் விளக்கு ஏற்றி வைத்திருக்கிறேன் தெரியுமா, உனக்கு என்னடா தெரியும்? உல்லாச உலகில் உலவி வருகிறாய், என் பணத்தைச் செலவழித்துக்கொண்டு! இதிலே உபதேசம் வேறு செய்கிறாயா, உபதேசம்!

[பாய்ந்து சென்று கண்ணாயிரத்தின் சட்டையைப் பிடித்திழுத்து அவனைக் குலுக்கியபடி, 'ஒரு ஏழையை வாழ வைத்ததுண்டா நீ? தொழில் கொடுத்ததுண்டா?' என்றவண்ணம் அவனை அலட்சியமாகத் தள்ளியபடி, 'அரிசி மில்லிலே நூறு பேர்...கட்டட வேலையிலே ஐநூறு பேர். கடைகளிலே இருநூறு என்னாலே பிழைக்கிறார்கள், என்னாலே, ஏழைப் பங்காளா! உன்னாலே அல்ல! சொல்லேனக்கா! உனக்குத் தெரியாதா? என்னாலே எத்தனை பேர் பிழைக்கிறார்கள் என்பதை. விரலை மடக்கடா பார்க்கலாம், வியாக்யானம் பேசுபவனே! விரலை மடக்கு, உன்னாலே ஒரு ஆளுக்காவது வேலையோ, தொழிலோ கிடைத்ததா? உனக்காக, நான் பாடுபட்டுத் தேடிய பணத்தைப் பாழாக்குவது தவிர வேறு என்ன தெரியும்?]