70
கண்ணாயிரத்தின்
அன்: (செல்லமாக) அவனுக்கென்னடா தலையெழுத்து உழைக்கணும்னு.
சிங்: (கோபமாக) அக்கா! குறுக்கிட்டுப் பேசாதே!
கண்: (அமைதியாக) பேசுங்களப்பா, பேசுங்கள். இம்சைக்கு ஆளான எத்தனையோ பேர் சொல்லத்துணியாததை நான் சொல்லிவிட்டேன். கோபம் கொப்பளிக்கிறது...உங்களுக்கு...பேசுகிறீர்கள்...உங்களாலா முடியாது முடுக்காகப் பேச...பேசுங்கள்! உம்மிடம் கடன்பட்டு சொத்தை இழந்தவன் சபிக்கிறான்...உம்மை! உம்மை மட்டுமல்ல...நம்மை! காதிலோ விழுகிறது. முதலிலே கடுங்கோபந்தான் பிறந்தது எனக்கும்! உண்மை பிறகு தெரிந்தது...வெட்கமும் வேதனையும் பிய்த்துத் தின்கிறது இதயத்தை!
அன்: (விளங்காமல்) கடனைத் திருப்பி வாங்குவதிலே கண்டிப்பாக இருப்பது பெரிய பாவமாடா அப்பா! அப்படியும் எத்தனையோ பேருக்கு வட்டி தள்ளிக் கொடுத்திருக்கிறானே தம்பி!
கண்: உங்களுக்கென்ன தெரியும்? வெளுத்தது பால் உங்களுக்கு... மற்றொரு பயங்கர உண்மையைச் சொல்லட்டுமா? குப்பம் வெள்ளத்திலே மூழ்கி அழிந்ததே, மூன்று குழந்தைகள் பிணமாகி மிதந்தனவே, மக்கள் வீடிழந்து தவித்தார்களே, யாரால்...
அன்: பைத்தியக்காரப் பிள்ளையா இருக்கறியே...அந்த மக்களுக்குக் கஞ்சி வார்க்கப் பணம் கொடுத்ததே உன் அப்பா தானே...
கண்: கஞ்சி வார்த்தார் கதறிய மக்களுக்கு—கதியற்ற மக்களுக்கு, என் அப்பா! எப்படிப்பட்ட கருணை? கோயில் கட்டி அல்லவா கும்பிடவேண்டும்! என்னை நேருக்கு நேர் பார்த்துச் சொல்லச் சொல்லுங்கள்...குப்பம் அழிந்ததற்கு யார் காரணம்? கொலைபாதகத்துக்குக் காரணம் யார்? அழிவுக்குக் காரணம் யார்? கஞ்சி வார்த்த கனவானைச் சொல்லச் சொல்லுங்கள் பார்ப்போம்...