பக்கம்:கண்ணாயிரத்தின் உலகம்.pdf/97

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

துண்டு

99

உன் மகனோட சிஷ்யப்பிள்ளை, கொஞ்சங்கூடக் கூச்சமில்லாமே, தெளிவா—பாதகன்னு பட்டம் சூட்டி, கூப்பிடுகிறான்...கூப்பிட்டு...

[படிக்கிறார்.]

படித்துப் பார், ரொட்டித் துண்டு! பாரத் பூஷணன் எழுதியது. பாரத்பூஷண் யார்?

[படிப்பதை நிறுத்திவிட்டுப் பேசுகிறார்.]

கேட்க வேண்டிய கேள்விதானே! நீ என்னடா, நானே அதே கேள்வியைத்தான் கேட்கிறேன்...

[மீண்டும் படிக்கிறார்.]

கேட்குதாடி காது ! நாலு வரிமுடியல்லே. இதற்குள்ளே இரண்டாவது தடவை பிசாசே! பணம் காக்கும் பிசாசே! சரியாத்தான் எழுதி இருக்கறே! சேர்க்கறேன், காக்கறேன்...அவ்வளவுதான்—தின்னு ஏப்பம்விட இருக்காண்டா அவன்! உன்னோட ஏழைப் பங்காளன்.

[மீண்டும் படித்தபடி]

உன்னிடம் கோடி ரூபாய் இருந்தும் யார் உன்னை மதிக்கிறார்கள்? பாரத்பூஷணனுக்கு நாடே மரியாதை காட்டுகிறது.

[உரத்த குரலில் படிக்காமல், மனதுக்குள் படித்து விட்டு...பேசுகிறார்.]

இதைக் கேட்டாயா? பாரத்பூஷண் யாராம் தெரியுமா!

[சுப்புத்தாய் விழிக்க]

ஏண்டி விழிக்கறே...இப்படி இவன் எழுதறாண்டி...

[படிக்கிறார்.]

எங்களுடைய மனக்கொதிப்புதான் உனக்கு மகனாக வந்து பிறந்திருக்கிறது.