பக்கம்:கரை மணலும் காகித ஓடமும்.pdf/121

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

11


திருப்பு முனைகள்

திருப்பு முனகள் இல்லையென்றால், வாழ்க்கையின் பாதைக்குச் சுவை கூடுவது இல்லை போலும் !

ஆம் , அப்படித்தான் ஞானபண்டிதனுக்குப் பட்டது.

இல்லாவிட்டால், யாருக்காக அவன் கடந்த சில மணி நேரமாக அல்லற்பட்டு, ஆதங்கப்பட்டு, ஆதுரப்பட்டானோ அதே பெண் பூவழகி, சற்றும் எதிர்பாராத முறையில், குழலியின் வீட்டில் முகம் காட்டி நிற்பாள் என்று அவன் கனவு கண்டிருக்க முடியுமா , என்ன ?

அன்று முரடன் செங்கோடனிடமிருந்து அவன் கண்களில் மண்ணைத் தூவி விட்டுப் பறந்து சென்ற பைங்கிளியை எப்படி மீண்டும் தேடிக் கண்டுபிடிப்பது என்று பலவாறாக அவன் மூளையைக் குழப்பிக்கொண்டிருந்தான். பூவழகி இப்போது தகுந்த நிழலில் ஒண்டிவிட்டதாகவே அவன் கருதினான். இந்த ஒதுங்கிய இடம் செங்கோடனின் கழுகுக் கண்களுக்குத் தெரிந்திருக்க வழியில்லை என்பதாகவும் அவன் தனக்குத்தானே தேற்றிக்கொண்டான். எதிரியின் கண்களிலே மண்ணைத் தூவியவள் தன் கண்களிலே சொக்குப்பொடி தூவி விட்டதையும் அவனது அந்தரங்கள் அவனுக்குச் செப்பின. பட்டங்கள் சுமந்த நவ நாகரிகக் குமரிகள் தனக்கென்று பலர் காத்திருக்க, இப்போது இந்தப் பெண் தன் நெஞ்சில் இடம் பிடித்துக்கொண்ட விந்தையை, விட்ட குறை என்பதா, தொட்ட குறை என்பதா என்று முடிவு கட்ட முடியாமல் தவித்தான். அவன் தவிப்பு இன்பத் தவிப்பு.

‘பூவழகி நிரம்பவும் வெள்ளை மனம் கொண்டவள். தன் கற்பைச் சூறையாட நினைத்தான் ஒரு பாவி என்று கண் கலங்கிச் சொன்னாளே, மறைக்காமல் ! அந்தப் பாவி யாரென்று சொல்லவில்லையே !... வரவர, உலகத்தில் நீதிக்கும் நேர்மைக்