10
1. ஆசிரியர் நச்சினார்க்கினியர் கலிச்செய்யுட்கள் 149-ல் ஒரே ஒரு செய்யுளடியில் மட்டும் (நெய்தற் கலி25) "தம் பேரறிவு தோன்ற ஆசிரியர் நல்லந்துவனார் செய்யுள் செய்தார்” எனக் கூறியிருத்தல் கவனிக்கத் தக்கது. அவர், "செய்யுள் செய்தார்" எனக் கூறினரே அன்றி, "அந்நெய்தற்கலி முழுதும் பாடினார்" எனக் கூறாமை காணத்தகுவது. மேலும், எந்தக் கலியையும் ஒரே புலவர் பாடினார் எனக் கூறல் பொருந்தாதென்பதற்கு மேற்காட்டிய காரணங்களையும் இத்துடன் வைத்து எண்ணுதல் வேண்டும். நச்சினார்க்கினியர் தம் காலத்துப் புலவர் கூற்றை நம்பி- 'இச்செய்யுள் இன்னவரது' எனக் கூறி இருக்கலாம், அன்றோ? தம் கால வழக்கை வெளியிடுதலில் நச்சினார்க்கினியர் முன்னணியில் நிற்பவர் என்பதற்குத் தொல்காப்பியப் பாயிர உரையில் அவர் கூறியுள்ள அகத்தியர் மனைவி சம்பந்தப்பட்ட பொருத்தமற்ற ஆபாசக் கதையே சிறந்த சான்றாகுமன்றோ?'
2. கலித்தொகைச் செய்யுட்கள் பலவகைப்பட்ட நடைவேறுபாடுகள் உடையன; கூர்ந்து கவனிப்போர் சொற்செறிவையும்-சொல் தளர்வினையும் நடைமிடுக்கையும் எளிய நடையையும், பழைய தமிழ்க் கொள்கைகளையும் குடிபுகுந்த புதிய கொள்கைகளையும், முற்காலக் கருத்துகளையும்-பிற்காலக் கருத்துகளையும் நன்கறிந்து வியத்தல் கூடும். சுருங்கக் கூறின், கலித்தொகைச் செய்யுட்கள்-ஏனைத் தொகை நூற் செய்யுட்களைப்போல் பல்வேறு புலவரால் பாடப்பட்டவை ஆகும். கலித்தொகையை மேலும் ஆராய்ந்து முடிவு கூறல் கற்றறிந்த மாந்தர் கடன்.
கலித்தொகையின் 'காலம்' யாது?
1. கடைச் சங்கத்தின் இறுதிக் காலம் கி.பி.2 ஆம் நூற்றாண்டு என்பர் வரலாற்று வல்லார். கடைச் சங்கத் தொகை நூல்களுள், பல நூற்றாண்டுகளிற் பாடப்பட்ட செய்யுட்கள் உள்ளன. அவற்றுள் பல களவியலை அடிப்படையாகக் கொண்ட ஒத்த காமத்தைப் பற்றியவை. கைக்கிளை, பெருந்திணைகளைப்பற்றி அச்சான்றோர் செய்யுள் செய்திலர். இன்றைய தொகை நூல்களில் அவை காணுமாறில்லை. பாடிய ஒத்த காமச் செய்யுட்களும் உயரிய பொருள் நோக்குடையன. ஆனால், குறிஞ்சிக் கலிச்செய்யுட்களோ அவர் மரபுக்கு மாறாகப் பெரும்பாலும் பொருளியல் சூத்திரங்கட்கு இலக்கியமாக அமைந்தவை; கைக்கிளை பெருந்திணைச் செய்யுட்களைக் கொண்டவை; உயரிய பொருள் நோக்கம் ஓரளவு குறைந்தவையே ஆகும்.
1. P.T.Srinivasa lyengar's History of the Tamils'. P.224