பக்கம்:கலித்தொகை 2011.pdf/12

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

11


இவ்வேறுபாட்டைச் சங்க நூற் பயிற்சி உடையோர் நன்குணர்தல் கூடும்.

2. "மையின் மதியின் விளங்கு முகத்தாரை
வவ்விக் கொளலும் அறனெனக் கண்டன்று"

(குறிஞ்சிக் கலி-26)

பெண்டிரை வௌவிக் கோடல் ‘இராக்கத மணம்' எனப்படும். இராக்கத மணத்தைத் தொல்காப்பியர் கூறிற்றிலர்.

'பெருந்திணை-ஒவ்வாத காமம்' எனத் தொல்காப்பியர் கூறினரே அன்றி, இராக்கதர் மணமுறையாகிய வௌவிக்கோடலைத் தமிழ்மக்கள் கையாண்டனர் எனக்கூறிலர். 'இராக்கத மணம் அறன்' எனத் தொல்காப்பியரோ, சங்கநூற் புலவரோ யாண்டும் கூறிற்றிலர். ஆரியருடைய எண்வகை மணங்களுள் 'இராக்கதமணம்' ஒன்றாகும். தமிழர்க்கு இம்மணம் உண்டென யாம் இதுகாறும் கேட்டதில்லை. அடியோர் தலைவராகக் கொள்ளினும் தமிழகத்துள் அடிபட்ட பழக்கத்துக்கு மாறாகச் சங்கத்துச் சான்றோர் செய்யுள் செய்யார். ஆகவே, 'இராக்கத மணம் அறன்' எனக் கூறும் இச்செய்யுளும், இதுபோன்ற கலிச்செய்யுட்களும் கடைச் சங்கப்புலவர்க்குப் பிற்பட்ட-ஆரியக் கொள்கைகள் அறனெனக் கருதப்பட்ட காலத்தனவாகும் என்பதைக் கூறவும் வேண்டுமோ?

3. குறிஞ்சிக்கலிச் செய்யுள் ஒன்றில் தலைவி, "தோழி, நீ தெருவில் போவார்க்கெல்லாம் இரங்குதல்-வாரணவாசியில் (காசியில்) பிறர் வருத்தம் தம் வருத்தமாகக் கருதும் அருளுடையார் செயலை ஒத்துள்ளது" (24) எனக் கூறியுள்ளது கருதற்பாலது. ஏனைய தொகை நூல்களில், யாமறிந்தவரை, இச்செய்தி காணப்பட்டிலது. வாரணவாசி (காசி) நகர மாந்தர் செய்தி எந்த அளவு தமிழகத்தில் பரவி இருந்தால், அதனைத் தலைமகள் சொல்வதாகப் புலவர் பாடியிருப்பரென்பது சிந்திக்கத் தக்கது. ஏனைய பழம் பாடல்களில் காணப்பெறாத இவ்வடநாட்டுச் செய்தி சங்க காலத்திற்குப் பிற்பட்டதென்பதில் ஐயமுண்டோ?

4. ஏனைய தொகைச் செய்யுட்களில் காணப்படாத முன்னிலைப் பன்மைச் சொல்லாகிய "நீர்" பலர்பாற் சொல்லோடு "கள்" விகுதி சேர்த்துக் கூறப்படல். "செய்யும்" என்னும் வாய்ப்பாட்டு வினைமுற்றுப் 'பலர் பாலில் வார்' போன்றவை கலித்தொகைச் செய்யுட்களில் காணப்படுகின்றன. மேலும், 'நின்றீத்தை கோசீத்தை' (மருதக்கலி-29) எனவும், 'இல்லானும், பாடித்தை இஃதொத்தன்' (குறிஞ்சிக் கலி-22, 24, 26) எனவும் பல சொற்கள் மாறுபட்டுச் செய்யுட்களில் இடம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலித்தொகை_2011.pdf/12&oldid=1680280" இலிருந்து மீள்விக்கப்பட்டது