பக்கம்:கலித்தொகை 2011.pdf/146

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கலித்தொகை - குறிஞ்சிக் கலி

145


சொரியலாயின. இவள் இங்ஙனம் ஆவதற்கு, கொடிய இருளாயிற்றே என ஏங்கி, அவ்விருளிலும் உன் வரவை எதிர்நோக்கி, அந்நினைவாகவே இருந்து வருந்தும் இவளுடைய உறக்கம் இழந்த கண்கள் செய்த தவறு ஏதேனும் உண்டோ?

மெல்லிய நீர் நுரை கரையை மோதும் இளவேனிற் காலத்தில், உன் சோலையில் ஒளி இழந்து போகும் தளிர் போல் இவள் மேனி, தளர்ந்து, ஒளி இழந்து, உள்ளக் காதலை ஊரார்க்கு உரைத்துவிடும்; இவள் இங்ஙனம் ஆவதற்கு, பல நாளாக, உன் நினைவு வருத்துதலால், பசலையால் பாழ்பட்ட இவள் மேனியின், மாமைநிற அழகு செய்த தவறு ஏதேனும் உண்டோ?

அன்ப! அவள் இறந்து போகாதபடி காப்பாற்றிய என் வருத்தத்தை அளவிட்டு நோக்கினால், அது, மலையினும் மாணப் பெரிதாம். ஆகவே, 'அன்ப! நீ பிரிந்து வாழும் எம் தலைவியோடு கொண்ட நட்பு வரைந்து கொள்வதால் மேலும் வலுப்படுதல் வேண்டும்' என வாளா வேண்டிக்கொண்டு, கவலையற்று உறக்கம் கொள்ள நான் அஞ்சுகிறேன். ஆகவே, நான் இனியாவது இனிதே கண்ணுறங்கும்படி இன்றே திருமண முயற்சியினை மேற்கொள்வாயாக.

ஆம்-நீர். தகை-அழகு. தேம்-தேனீக்கள். கவுள்-கன்னம். வாய் நில்லா-எதிர் நிற்க மாட்டாத. முன்பு-வலி. துருத்தி-ஆறுகளின் இடையிடையே உள்ள திட்டு. எருத்து-கழுத்து. எறுழ்-மிக்க. தாழ்செறி-தாழ்ப்பாள் இட்டு அடைத்தாற் போல். ஊழ்-வரிசை. கோடல்-காந்தள். எல்-ஒளி. உகுப-கழன்று வீழும். இனை-வருந்துதல். பாடு-உறக்கம். அரற்றும்-பழிகூறும். கலுழ்ப-சொரியும். செதும்பு-அருவிநீர். செவ்வி-காலம். உகு-கெட்ட. பின் ஈதல்-உறவு ஒன்று படுதல்.

உள்ளுறை: யானைகளோடு புலி மாறுபட்டுப் பொருதல், தலைவியின் இருவகைச் சுற்றத்தாரையும் அஞ்சாது, அயலார், அலர் கூறுதலாம் என்க.

13. இனிது! இன்னாது!

னம் விரும்பும் மங்கையொருத்தியைக் காதலித்த ஓர் இளைஞன், விரைவில் மணந்து கொள்ள விரும்பவில்லை. ஆனால், அம்மங்கையோ, அவன் இரவில், காட்டையும் மலையையும் கடந்து வருவது குறித்துக் கவலை கொண்டாள். அது கண்ட அவள் தோழி, இளைஞனைக் கண்டு, 'இரவில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலித்தொகை_2011.pdf/146&oldid=1777500" இலிருந்து மீள்விக்கப்பட்டது