பக்கம்:கலித்தொகை 2011.pdf/153

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

152

மா. இராசமாணிக்கனார்


ஐது அகல் அல்குலால் செய்குறி நீ வரின்
கறிவளர் சிலம்பில் வழங்கலானாப்
புலி என்று ஓர்க்கும் இக்கலிகேழ் ஊரே;
எனவாங்கு,
விலங்கு ஓரார், மெய் ஓர்ப்பின், இவள் வாழாள்;
                                         இவளன்றிப் 20

புலம் புகழ் ஒருவ! யானும் வாழேன்;
அதனால், பொதி அவிழ் வைகறை வந்து நீ குறைகூறி
வதுவை அயர்தல் வேண்டுவல்; ஆங்குப்
புதுவை போலும் நின் வரவும், இவள்
வதுவை நாண் ஒழுக்கமும் காண்குவல் யானே." 25

முறம்போன்ற காதின் மறைவில் வந்து பாய்ந்த புலியை கௌரவர் நூற்றுவரில் மூத்தோனாகிய துரியோதனனைத் தொடையை முறித்து அழித்த வீமசேனன் போல், தன் கொம்புகளால் குத்திக் கொன்று, பகை தீர்த்துக் கொண்ட யானை, மல்லர்களைக் கொன்று அழித்த திருமால் போல், தன் இன யானைகளிடையே கூடி, மலைச்சாரலை நோக்கிச் செல்லும் மலைநாடனே! நான் கூறும் இதைக் கேள்:

தாமரை மலர்களால் ஆன மாலையைத் தலையில் அணிந்து, மணம் வீசும் சந்தனத்தை மார்பில் பூசி, மாலை அணிந்த உன் காதலி வரக்குறித்த இடத்திற்கு நீ வந்தால் உன்னை, மணம் வீசும் மணப் பொருள் அணிந்து, குறவர்கள் அளிக்கும் பலி ஏற்று மலைமேல் கோயில் கொண்டிருக்கும் முருகனாகவே கருதி, அணுக அஞ்சுவர் இவ்வூரார்.

நீராடிக் கட்டிய ஈர ஆடையோடு இராக் காலத்திற்கு ஏற்ற, பிற ஒப்பனைகளையும் கொண்டு, நினைவெல்லாம் உன்பாலே உள்ளமையால் சோர்ந்து சோர்ந்து விழும் கூந்தலை உடைய உன் காதலி வரக்குறித்த இடத்திற்கு நீ வந்தால் உன்னைக் களிறு என்று கருதிய கானவர், அதை விரட்டும் கருத்தினராய், அதற்கு வேண்டிய தீப்பந்தங்களையும், கவணையும், வில்லையும் தேடி ஆரவாரம் செய்வர்.

ஆரங்கள் விளங்கும் மார்போடு, தலைமை, தண்ணருள் முதலிய குணங்களும் கொண்டு, உன் காதலி வரக்குறித்த இடத்திற்கு நீ வந்தால் உன்னை, மிளகுக் கொடி படர்ந்த மலைக்காட்டில் திரியும் புலியாகக் கருதிக் கானவர் அஞ்சி அகன்று செல்வர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலித்தொகை_2011.pdf/153&oldid=1778633" இலிருந்து மீள்விக்கப்பட்டது