பக்கம்:கலித்தொகை 2011.pdf/156

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கலித்தொகை - குறிஞ்சிக் கலி

155


பின்னர்த் துன்பம் உண்டாகும்படி பிரிந்து சென்று நீ மறந்து விட்டால், இத்துன்பம் தெய்வத்தால் வந்தது எனக்கூறி, அத்தெய்வத்தை வழிபடாதிருப்பதும் இயலும்; ஆனால், அதற்கு அந்நெற்றி துணைபுரியவில்லையே! யாம் என் செய்வோம்?

ஊரார் அலர் கூறித் தூற்றுவதால் இவள் நெற்றி, ஒளி இழந்து பீர்க்கம் பூப்போலாகி பிறைத் திங்கள் போன்ற பேரழகையும் இழக்காதிருக்குமாயின், தொடக்கத்தில் இனிமை செய்து விட்டுப் பின்னர்த் துன்பம் உண்டாகும்படி பிரிந்து சென்று நீ மறந்துவிட்டால், இத்துன்பம் தெய்வத்தால் வந்தது எனக் கூறி, அத்தெய்வத்தை வழிபடாதிருப்பதும் இயலும்; ஆனால், அதற்கு அந்நெற்றி துணைபுரியவில்லையே! யாம் என் செய்வோம்?

உண்மை உணர்வோடு நின்று நோக்கும் பகற்காலத்திலும் அழகு கெட வாட்டும் பிரிவுத் துன்பம், கனவிலும் வந்து வருந்தாதிருக்குமானால், 'அஞ்சாதே! நான் பிரியேன்' என்று கூறி ஏமாற்றி விட்டுப் பின்னர்ப் பிரிந்து நீ கைவிட்டு விடுவதால், நெஞ்சு அழிவதற்குக் காரணமான துயர் வந்து வருத்தினும், செல்லும் உயிரைச் செல்லாதபடி காத்து நிறுத்துவது இயலும்; ஆனால், அதற்கு அப்பிரிவுத்துயர்தான் துணைபுரியவில்லையே! யாம் என் செய்வோம்?

- என்று கூறி நான் வருந்துமாறு, வருந்தும் என் தோழி உன் மலையில், மழை இன்மையால் வாடிய தினை மழை பெற்றதும் தளிர் ஈன்று அழகு பெறுவது போல், உன், அன்பைத் தொடர்ந்து பெற்றால், அவள் நெற்றி அழகும் பண்டுபோல் பெருகும். ஆகவே, அவளை விரைந்து வந்து மணந்து கொள்வாயாக!

வறன் உறல்-மழை இன்றி வாடுதல். விறல்-சிறப்பு. வியல்-அகன்ற. வீழ்-விரும்பும். உழை-பக்கம். புய்-பிடுங்கிய. நந்தி-நீர் நிறைந்து. தலைஇய-உச்சியிற் கொண்ட. மறை-களவொழுக்கம். மருவுதல்-கூடுதல். நெகிழ்பு-கழன்று. பரவுதல்-வழிபடுதல். ஓடி-கெட்டு. அட-வருத்த. நலிதந்த-வருத்திய. முளிவுற-உலர்ந்து போம்படி. நந்தும்-பெருகும்.

உள்ளுறை: மணம் நாறும் காந்தள், கொடிய கொம்புபோல் தோன்றல், நல்லவனாகிய தலைவன், வரைந்து கொள்ளாமையால் கொடியவன் போல் தோன்றலாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலித்தொகை_2011.pdf/156&oldid=1782270" இலிருந்து மீள்விக்கப்பட்டது