பக்கம்:கலித்தொகை 2011.pdf/162

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கலித்தொகை - குறிஞ்சிக் கலி

161


பறை அறைந்தல்லது செல்லற்க' என்னா
இறையே தவறுடையான்."

ஊர் நடுவே வளர்ந்த இளமரக்காவின் இடையே ஓடும் அருவிக் கரையில் முளைத்த புலி நகக் கொன்றையின் மலர்ந்த பூக்களைப் பறித்து வந்து, பூவும் மயிரும் மாறி மாறி வருமாறு கூந்தலை முடித்துக்கொண்டு, வாரி முடிக்குமளவு நீண்ட அத்தலைமயிர், மலர்களோடு சிறிதே குலைந்து தோளிலே வந்து விழ, முழுமதி, குளிர்ந்த கதிர்களை வெளிப்படுத்தியது போல், முகம் ஒளி காட்ட, நான் நிற்கும் இவ்விடம் நோக்கி வரும் இவள் யாரோ? பாவை புனைவதில் வல்ல ஒருவன் பண்ணி வைத்த ஓவியப் பாவையோ? மகளிருள் நல்லவர் எனப் போற்றப்படுபவரிடத்தில் காணக் கூடிய நல்லியல்புகள் அனைத்தையும் ஒரு சேரப்பெற்று வந்தவளோ? ஆண் மக்களிடத்தில் கொண்டுள்ள வெறுப்பினால், அவரை அழிக்க, பெண்வடிவம் கொண்டு வந்த கூற்றுவனோ? இவளுக்கு உரியவர் இவளைத் தம் மனைக்குள்ளாகவே அடைத்து வைக்காது வெளியே வரவிட்டது கொடுமையினும் கொடுமை! பூங்கொடி போன்ற அசைவும், பல மணிக் கோவையாலான மேகலையும், பூத்தொழில் செய்யப் பெற்ற ஆடையும் உடைய இவள், இவ்வூர்வாழ் செல்வர் பல்லாண்டு மகப்பேறின்றி வருந்தி, இறுதியில் அருந்தவம் ஆற்றிப் பெற்ற பெண்ணாவாள் போலும்!

இனி, சற்றே நிறுத்தி, இவளோடு சொல்லாடிப் பார்க்கின்றேன்.

நல்லவளே! நான் கூறும் இவற்றைக் கேள்.

கண்டவர் கண்டவுடனே காதல் கொள்வதற்குக் காரணமாகிய மான் போன்ற பார்வையினையும், மடப்பத்தினையும் உடைய நல்லவளே! அழகிய வெண்ணிறத் தூவியினையுடைய அன்னம் போன்ற உன் நடையும், அழகிய பெண்மயில் போன்ற உன் சாயலும், கல்லுண்டு வாழும் புறாப் போன்ற உன் மடப்பமும் உன்னைக் கண்டவர்களை அறிவு மயங்கச் செய்யும் என்பதை நீ அறிவாயோ? அல்லது அறியாயோ?

மடப்பம் மிக்க நல்லவளே! முற்றிய கோங்கின் அரும்பு போலவும், அடிபருத்துத் தோன்றும் தென்னங் குரும்பை போலவும், மழை நீரில் எழும் மொக்குள் போலவும், காட்சி அளிக்கும் உன் இளம் கொங்கைகள் உன்னைப் பார்ப்பவரின் உயிரை வாங்கும் என்பதை நீ அறிவாயோ? அல்லது அறியாயோ?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலித்தொகை_2011.pdf/162&oldid=1786123" இலிருந்து மீள்விக்கப்பட்டது