பக்கம்:கலித்தொகை 2011.pdf/163

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

162

மா. இராசமாணிக்கனார்


- என்று நான் பலப்பல கூறிப் புலம்பவும், அறிவு மயங்கியவள் போல், பிறர் துயரை அறியாமல், ஏதும் வாய் திறந்து கூறாமல் போகின்றவளே! நான் கூறும் இதையும் கேள்; உன்மீதும் குற்றம் இல்லை; உன்னை வெளியே செல்ல விட்ட உன் பெற்றோர் மீதும் குற்றம் இல்லை! பேரழகு மிக்க மங்கையர் வெளியே செல்வதானால், மதம் பட்ட கொலையானையைத் தண்ணீர்த் துறைக்குக் கொண்டு சென்றால் அதன் வருகையைப் பறையறைந்து அறிவித்து விட்டுக்கொண்டு செல்வது போல், என்னைப் போன்ற இளைஞர்கள் ஓடி மறைந்து கொள்ள வருகையைப் பறையறைந்து முன்னே அறிவித்து விட்டுப் பின்னே செல்வதல்லது, அறிவியாது செல்லுதல் கூடாது என ஆணையிடாத இந்நாட்டு அரசன் மீதே குற்றமாகும்!

நிவந்த-வளர்ந்த. பொதும்பர்-சோலை. ஞாழல்-புலிநகக் கொன்றை. கழும்-மயங்க. கூழை-கூந்தல். சுவல்-தோள். பல்கலை-மேகலை. கலிங்கம்-ஆடை. தகைத்து-தடுத்து. தூவி-தோகை. தூதுண்-கல்லைத் தின்னும். துதைந்த-மிகப்பெற்ற. பேதுறூஉம்-மயக்கும். நுணங்கு-நுண்ணிய. புணை-தெப்பம். குரும்பை-தேங்காய்ப் பிஞ்சு. முகிழ்-மொக்குள். இறந்து ஈவாய்-கடந்து செல்கின்றவளே. போதரவிட்ட-போகவிட்ட.

21. மனை பெயர்ந்தாள்!

காதல் உணர்வு பெறாத கன்னி அவள். ஆயினும் அவள்மீது காதல் கொண்டு விட்டான் ஒரு கட்டழகன். பந்தாடிக் கொண்டிருக்கும் அவளை ஒரு நாள் கண்டு அவன் கூறிய காதற் பேச்சு இது:

"வேய்எனத் திரண்டதோள், வெறி கமழ் வணர் ஐம்பால்,
மாவென்ற மடநோக்கின், மயில்இயல், தளர்பு ஒல்கி,
ஆய்சிலம்பு அரி ஆர்ப்ப, அவிர் ஒளிஇழை இமைப்பக்,
கொடி என, மின் என, அணங்கு என, யாதொன்றும்
தெரிகல்லா இடையின்கண் கண்கவர்பு ஒருங்கோட, 5

வளமைசால் உயர் சிறப்பின், நுந்தை தொல்வியன் நகர்,
இளமையான் எறிபந்தோடு இகத்தந்தாய் கேள்இனி.
பூந்தண்தார்ப் புலர்சாந்தின் தென்னவன் உயர்கூடல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலித்தொகை_2011.pdf/163&oldid=1786124" இலிருந்து மீள்விக்கப்பட்டது