பக்கம்:கலித்தொகை 2011.pdf/164

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கலித்தொகை - குறிஞ்சிக் கலி

163


தேம்பாய அவிழ்நீலத்து அலர்வென்ற அமர்உண்கண்,
ஏந்துகோட்டு எழில்யானை ஒன்னாதார்க்கு அவன்வேலின் 10

சேந்துநீ இனையையால் ஒத்ததோ? சின்மொழி!
பொழிபெயல் வண்மையான் அசோகம்தண் காவினுள்,
கழிகவின் இளமாவின் தளிர்அன்னாய்! அதன்தலைப்
பணைஅமை பாய்மான்தேர் அவன்செற்றார் நிறம்பாய்ந்த
கணையினும் நோய்செய்தல் கடப்புஅன்றோ?
                                                                                 கனங்குழாய்! 15

வகையமை தண்தாரான் கோடுஉயர் பொருப்பின்மேல்
தகைஇணர் இளவேங்கை மலர்அன்ன சுணங்கினாய்!
மதவலி மிகுகடா அத்து அவன் யானை மருப்பினும்
கதவவால் தக்கதோ, காழ்கொண்ட இளமுலை,
எனவாங்கு, 20

இனையனகூற, இறைஞ்சுபு நிலம்நோக்கி,
நினையுபு, நெடிதொன்று நினைப்பாள்போல் மற்றுஆங்கே,
துணைஅமை தோழியர்க்கு அமர்த்த கண்ணள்,
மனையாங்குப் பெயர்ந்தாள் என்அறிவு அகப்படுத்தே."

மூங்கில் போல் பருத்துத் திரண்ட தோளும், பின்னிவிடப்பட்ட கூந்தலும், மானின் விழிகளை வென்ற பார்வையும், மயில் போன்ற சாயலும் பெற்று, சிலம்பு ஒலிக்க, அணிகலன்கள் ஒளிவீச, மலர்க்கொடி என்றோ, மின்னற்கொடி என்றோ, கண்ணில் பட்டவரை வருத்தும் கடவுள் என்றோ துணிந்து கூற முடியாத இடையில், காண்பவர் கண்கள் காதல் கொள்ள, வளம்மிக்க புகழ் வாய்ந்த, உன் தந்தையின் மனையிலிருந்து, பந்தோடு வெளிப்பட்டு நடை தளர்ந்து, ஒதுங்கி ஒதுங்கிப் போகின்றவளே! நான் கூறும் இவற்றைக் கேட்பாயாக!

சொல்லழகுடையாய்! பாண்டியனுக்குரிய கூடல் மாநகரில், தேன் ஒழுகி வழியுமாறு மலரும் கருநீல மலரை வென்ற, மைதீட்டிய உன் கண்கள், யானைப்படை வல்லபகைவர்க்கு, அப்பாண்டியன் வேல் மனவருத்தம் தருவது போல், வருத்தம் செய்ய, நீ இவ்வியல்புடையவளாதல், உனக்குத் தகுமோ?

கனத்த காதணி உடையவளே! பொய்யாது பெய்யும் மழை போன்ற பெரிய கொடையாளியாகிய பாண்டியனுக்குரிய அசோக வனத்தில், அழகு வாய்ந்த மாந்தளிர் போன்ற

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலித்தொகை_2011.pdf/164&oldid=1786126" இலிருந்து மீள்விக்கப்பட்டது